தையிட்டி விவகாரத்திலிருந்து விலக சாமர்த்தியமாக காய் நகர்த்தும் அநுர !
ஈழத்தமிழர்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக ஏற்படுத்தியிருக்கூடிய ஒரு விடயம் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தையிட்டி திஸ்ஸவிகாரை இந்த விகாரை விவகாரம் தமிழ் சிங்கள தரப்புகளிடையே பூதாகரமான ஒரு பிரச்சனையாக இருந்து வருகின்றது
நில உரிமையாளர்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக போராடி வருகின்றார்கள்
தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அந்த நிலங்களின் மீது தங்கள் கடவுளை குந்த வைக்கின்ற ஆக்கிரமிப்பு மனோபாவத்தை இலங்கையின் சிங்களவர்கள் மாற்றப்போவதில்லை என்பதே உறுதியான ஒன்றாக இருந்து வருகின்றது
இந்தநிலையில், தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுகுமார திஸாநாயக்க, “திஸ்ஸ விகாரை பிரச்சினை இலகுவில் தீர்க்கப்படக்கூடியது.
அதனை மையப்படுத்திய வடக்கின் அரசியல் அதில் இருந்து நீங்க வேண்டும் அதன் பின்னர் திஸ்ஸ விகாரை தேரரும் நாகவிகாரை பிக்குவும் நில உரிமையாளர்களும் இணைந்து பேசி இலகுவாக இந்த பிரச்சினைக்கு தீர்வை கண்டுவிடலாம்” என தெரிவித்திருந்தார்.
இங்கு தொடர்ச்சியான ஒரு அழுத்த்தை இந்த விவகாரத்தில் வழங்கும் கஜேந்திரகுமார் அணி அதனை நீக்க வேண்டும் என அப்பட்டமாக ஒரு கருத்தை சொல்கிறார் ஜனாதிபதி.
அதன் இலகுவாக அந்த பிரச்சினையை உரிமையாளர்களோடு பேசி தீர்க்கலாம் என்கிறார் அப்படியானால் அந்த அப்பாவி மக்களோடு அடாவடித்தனம் புரிந்து திரியும் பிக்குகளை பேச வைத்து தீர்வை பெறுவது என்பது கல்லில் நாருரிப்பதற்கு சமமானது இல்லையா ?
தீர்வு என்று அந்த மக்களை மிரட்டி பின் வாங்கச் செய்யப்போவதுதான் தீர்வா? நிச்சயமாக விகாரை அகற்றப்படப்போவதில்லை அப்படியானால் மக்களின் நிலங்களை விழுங்குவதுதான் திட்டமா ?
ஜனாதிபதி தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்த அழைத்த தரப்புகளை பார்க்க ஏதோ கிணறு வெட்ட பூதம் வந்த கதையாகத்தான் இருக்கிறது
யாரிந்த நாகவிகாரை பிக்கு இவர்தொடர்பாக தொடர்ச்சியாக தமிழர் விவகாரத்தில் புலமைத்துவ ரீதியாக ஆராய்ந்து அணுகுகின்ற தளம் இப்படி பதிவு. செய்கிறது
நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் அவர்களை இணைத்து தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு தீர்வு காண முடியும் என அநுர சொல்லி இருக்கின்றார்.
ஆனால், ஸ்ரீ விமல தேரரின் பங்கேற்புடன் தான் தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கான (Vihara) அடிக்கல் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவினால் நாட்டப்பட்டது.
அதே போல ஸ்ரீ விமல தேரரின் பங்கேற்புடன் தான் அங்கு 100 அடி உயரமான தூபிக்கான (Stupa) அடிக்கல் ஜெனரல் சவீந்திர சில்வாவினால் நாட்டப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவிரோத விகாரை சூழலில் மற்றுமொரு கட்டுமானமும் ஸ்ரீ விமல தேரரின் பங்கேற்புடன் தான் அதிகாரியினால் திறந்து வைக்கப்பட்டது.
அதாவது சட்டவிரோத விகாரையின் சகல கட்டுமானங்களும் ஸ்ரீ விமல தேரரின் ஒத்துழைப்புடன் தான் நடந்தன.
இது மாத்திரமின்றி ஸ்ரீ விமல தேரர் மிக நீண்டகாலமாக ஆரியகுளம் நாக விகாரையுடன் தொடர்புபட்டது என்றும் அதனை புனித பிரதேசமாக அறிவிக்க கோரி வருகின்றார்.
அதே போல ஆரியகுளத்தின் மைய பகுதியில் ஒரு தியான மண்டபத்தை அமைக்கவும் முயற்சித்து வருகின்றார்.
இது போதாதென்று அப்பகுதியை சுற்றுலா மையமாக விருத்தி செய்யவும் தடை செய்து வருகின்றார்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஞானரத்ன தேரர் என்கின்ற பிக்குவின் பூதவுடலை எதிர்ப்புக்கு மத்தியில் ஸ்ரீ விமல தேரர் தகனம் செய்திருந்தார்.
இவ்வாறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் ஸ்ரீ விமல தேரர் என்கின்ற மகானையும் சட்டவிரோத தையிட்டி விகாரை விகாரதிபதியையும் இணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அநுர கதை சொல்லி இருக்கின்றார்.
அதாவது நிறைவேற்று அதிகாரம் மற்றும் 2/3 நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் கொண்டிருக்கும் ஆட்சியாளர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகளின் தயவில் தீர்வு காணமுடியும் என ஏமாற்றுகின்றார்.
ஆனால் ஊழலை ஒழிப்போம் என பேசும் அநுர சட்டவிரோத கட்டுமானத்திற்கு எவ்வாறு பௌத்த சாசன அமைச்சு நிதி விடுவித்தது என்பது பற்றி விசாரிக்க கூட தயாரில்லை.
சட்டவிரோத கட்டுமானத்திற்கு மொறட்டுவை பல்கலைக்கழகத்திடம் எந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவி பெறப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்க தயாரில்லை.
இராணுவத்தினர் கட்டுமானங்களில் ஈடுபட்டது குறித்தோ அல்லது இராணுவ நிர்வாகத்தின் கீழ் விகாரை இருப்பது குறித்து கூட விசாரிக்க தயாரில்லை.
சட்டவிரோத கட்டுமான திறப்பு விழாவில் அரசாங்க அதிகாரியான காவல்துறை அதிகாரி எவ்வாறு கலந்து கொண்டார் என்பது குறித்து வாய் திறக்க கூட தயாரில்லை.
ஆனால், பயங்கரவாத தடுப்பு பிரிவு அப் பகுதி மக்கள் மீதும் போராட்டங்களில் ஈடுபடும் பெண்கள் உட்பட்ட செயற்பாட்டாளர்கள் மீதும் விசாரணைகளை ஏவி தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது.
மறுபுறம் இந்த விகாரை அமைந்துள்ள பகுதியில் 406 சிங்களக் குடும்பங்களின் காணி என்று இராணுவத்தினர் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் நியாப்படுத்துகின்றார்கள்.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் தீர்வு தருவதாக அழைத்து ஸ்ரீ விமல தேரரின் நாக விகாரையில் வைத்து 600 சிங்கள குடிகளின் காணி என பௌத்த சங்கம் ஊடக பதிவு செய்கின்றார்கள்
இதற்கிடையில் விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி, மட்டுமின்றி சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு வழங்க வேண்டும் என இராணுவ புலனாய்வாளர் ஒருவர் தலைமையிலான அமைப்பு அரச அதிபருக்கு கடிதம் எழுதுகின்றது.
குறிப்பாக அங்கு பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம், புத்த மெதுரா, போதி, அன்னதான மடம், மடாலயம் , ஓய்வு மண்டப வசதிகள், தியான மண்டபங்கள், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என சொல்லுகின்றது.
தங்கள் பூர்விக நிலத்திற்காக இராணுவம், புலனாய்வாளர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு, பிக்குகள் என பல முனை அச்சுறுத்தல்களை மக்கள் எதிர்கொண்டிருக்கும் நிலையில் அரசியல்வாதிகள் தான் பிரச்சினை என்றும் பிக்குகளை வைத்து தீர்க்கலாம் என கதை சொல்ல அசிங்கமாக இருக்காதா "
ஆக தீர்வு என்பது ஒரு விவகாரத்தை பூதாகரமாக மாற்றுவதாகவோ அல்லது அது சார்ந்த ஒரு தரப்பை அச்சுறுத்தி பெறுவதாகவோ இருக்கப்போகிறதா..?
தீர்வுப்பேச்சுக்கு அழைப்பவர்களின் கடந்த கால செய்ற்பாடுகள் சொல்லும் அந்த தீர்வு எத்தகையது என்று.
ஆக இங்கு சிந்திக்கவேண்டியது நாம் தான் ஜனாதிபதி இந்த விவகாரத்தில் புத்திசாலித்தனமாக விலகி பொறுப்பை பேய்களிடமும் பூதங்களிடமும் ஒப்படைத்திருக்கிறார் எனபதே மெய்.
அழுத்தம் கொடுக்கும் சக்தி அப்புறப்படுத்தப்படவேண்டும் என்ற அப்பட்டமான வேண்டுகோளும் அடாவடித்தனம் புரியும் பிக்குகளின் தலைமையில் தீர்வுமே.
இந்தவிடயம் இனி எப்படி நகரும் என்பதனை சொல்லி நிற்கிறது.
சிந்திக்கவேண்டியது ஈழத்தமிழர்களாகிய நாமே...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
