திசைகாட்டியை குற்றம் சாட்டுவதாக நினைத்து திசைமாறும் சுயேட்சையின் திசை...
"தமிழ் தேசியமும் தமிழர்களின் மூச்சும்தான் எனது அரசியல் பாதை” தேர்தல் காலத்தில் இவ்வாறான உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் வடக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு கோரியவர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியத் திசைகாட்டியை எதிர்ப்பதாக திசைமாறியுள்ளது அண்மைகாலமாக.
தமிழில் தென்னிலங்கையின் முன்னால் எம்.பிக்களை படுகொலையாளிகள் எனவும், சிங்கள மொழியில் “மெத்திதுமா” என்ற புகழாரம் சூட்டுவதும் தமிழ் தேசிய அரசியலை வலுவிலக்க செய்கிறது.
ஊடக வெளிச்சத்தில் உமிழப்படும் வார்த்தைகள் வேறு, நிஜ அரசியல் களத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வேறு என்பதற்கு இவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
நாளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால், அவரிடமும் நான் செல்வேன் என்று மிக வெளிப்படையாகக் கூறியுள்ளார். இதன் மூலம் கொள்கை, கோட்பாடு என்பதைத் தாண்டி, ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களின் காலடியில் தஞ்சமடைவதுதான் இவ்வளவுகாலமும் கட்டிக்காத்த தமிழ் தேசிய அரசியலா?
அரசியலில் நிலைப்பாடுகள் மாறுவது புதிதல்ல. ஆனால், தேர்தலுக்கு முன் மக்களிடம் முன்வைக்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளுக்கும், தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உருவாகும்போது, அது அரசியல்வாதியின் கொள்கை மாற்றமா அல்லது சந்தர்ப்பவாத அரசியலா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
அவரின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளும் இதே கேள்வியை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் தேசிய அரசியலின் பாரம்பரியக் கட்சிகளையும் தலைமைகளையும் கடுமையாக விமர்சித்து, மாற்று அரசியல் பாதையை உருவாக்குவேன் எனக் கூறிய ஒருவர், இன்று தமிழ் மக்களின் அரசியல் உணர்வுகளுடன் முரண்படக்கூடியதாகக் கருதப்படும் தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தோன்றுவது எந்த வகையான அரசியல் மாற்றம்?
அத்தனை பலம் வழங்கி அநுர அரசை வெற்றிபெறசெய்த வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு எதிராக இன்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இருந்தும் இந்த குரல் நீதிக்கான, உரிமைக்கான, கண்ணீருக்கான பதில்களை தேடுவதை தாண்டி அதற்கு காரணமானவர்களின் காலடியில் சென்று விழுந்துள்ளது.
அரசியல் என்பது ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம்.
ஆனால், ஒரு அரசியல்வாதி தனது நிலைப்பாட்டை மாற்றும்போது, அந்த மாற்றத்துக்கான காரணத்தை மக்களுக்கு விளக்குவதும் அரசியல் பொறுப்பாகும்.
அவரின் அரசியல் பயணம் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. எனவே, அவரது தற்போதைய அரசியல் நகர்வுகளை வைத்து இறுதியான தீர்ப்பொன்றை வழங்குவது அவசரமானதாக இருக்கலாம்.
ஆனால், அவர் தேர்தல் காலத்தில் முன்வைத்த அரசியல் கருத்துகளுக்கும் தற்போது வெளிப்படுத்தும் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான மாற்றம் குறித்து கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.
மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியின் மிகப்பெரிய பலம் அவரது பதவியல்ல. அவரைத் தெரிவுசெய்த மக்களின் நம்பிக்கையே.
அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |