இலங்கைக்கு கடன் சலுகை வழங்கியுள்ள வங்கிகள் : அதிகரித்த டொலர் கையிருப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவியேற்றதிலிருந்து 2024 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் (Government of Sri Lanka) 1909.7 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் மற்றும் வட்டியை செலுத்தியுள்ளதாக அதிபர் பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன் (Rajith Keerthi Tennakoon) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் 2022 ஜூலை 21 முதல் 2024 பெப்ரவரி வரை 1338.8 மில்லியன் டொலர்களை பலதரப்புக் கடன்கள் மற்றும் வட்டியாகச் செலுத்தியுள்ளதாகவும், 2024 பெப்ரவரி வரை செலுத்த வேண்டிய கடன் தவணைகள் மற்றும் வட்டியில் எவ்வித நிலுவைகளும் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ரஜித் கீர்த்தி தென்னகோன் நேற்று (05) வௌியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 760.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு 7.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மேற்கூறியவாறு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கு 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கு 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் EFF 23-26 திட்டத்திற்கு 9.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், நோர்டிக் அபிவிருத்தி நிதியத்திற்கு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்திற்கு 29.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கிக்கு 489.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானுடன் இணக்கப்பாடு
இதன்படி அரசாங்கம் 1,338.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் மற்றும் வட்டியாக செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கடன் கொடுப்பனவு பதிவைக் கருத்தில் கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன கடன் மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கியுள்ளது.
இந்த காலகட்டத்தில், இருதரப்பு கடன்கள் மற்றும் வட்டியாக 571.0 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கடன்கள் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான இணக்கப்பாடுகளை எட்ட உரிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடனும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெரிஸ் சமவாய நாடுகளுடன் கடன் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பதோடு, 2024 பெப்ரவரி இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 450.7 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது.
கடந்த காலத்தில் இடை நிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்காக, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, குவைட், பாகிஸ்தான், ரஷ்யா, ஸ்பெயின், அமெரிக்கா, சீனா அபிவிருத்தி வங்கி, சீன – ஹங்கேரி, இந்திய மற்றும் அமெரிக்க எக்சிம் வங்கி உட்பட கிட்டத்தட்ட 25 நிதி நிறுவனங்களுடன், இலங்கை இருதரப்பு கடன் கொடுக்கல் வாங்கல்களை செய்துள்ளது.
மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு
இலங்கை மத்திய வங்கி தனது டொலர் கையிருப்பை வெளிநாட்டு நாணயங்களில் அதிகரித்துக் கொண்டு உள்நாட்டின் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவைக்கு செலுத்த வேண்டியிருந்த கடன்களை செலுத்தி முடித்த பின்பே இந்தக் கடன்கள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்பட்டிருப்பதோடு, அதற்கான கொடுக்கல் வாங்கல் அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், ஜப்பானிய யென்கள், கனேடிய டொலர்கள் ஆகிய நாணய அலகுகளில் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த பலதரப்பு, இருதரப்பு மற்றும் உள்நாட்டுக் டொலர் கடன்களை செலுத்திய பின்னர், நாட்டின் கையிருப்பு 4.9 பில்லியன் டொலர்களாக (4950 மில்லியன் டொலர்கள்) ஆக அதிகரித்துள்ளது.
அதிக வட்டி விகிதத்தில் அரசாங்கம் பெற்றுள்ள 4,439.2 மில்லியன் டொலர் வணிகக் கடன்கள் மற்றும் வட்டியை மறுசீரமைக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதுடன், மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் முடியும் வரை பணம் செலுத்தப்படாது.
2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவாக ஆரம்பிக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான சிறப்பு வட்டி விகிதத்தின் கீழ், அதாவது வருடத்திற்கு 15% வட்டி விகிதம் வழங்கப்பட்டது. அப்போது வங்கிகளில் நிலவிய குறைந்த வட்டி விகிதத்தில் இருந்து 15% அதிக வட்டி விகிதத்தைக் குறைக்க பணம் வழங்கியது திறைசேரி.
பொருளாதார நெருக்கடி
2015ஆம் ஆண்டு வர்த்தக வங்கிகள் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, இந்த வட்டி விகிதம் 10 இலட்சம் ரூபா வரை வழங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 15 இலட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, 12 இலட்சம் சிரேஷ்ட பிரஜைகள் கணக்குகளுக்கும் இந்த வட்டி விகிதம் கிடைத்தது.
2022 ஆம் ஆண்டளவில், இந்த கூடுதல் வட்டியை செலுத்துவதற்காக திறைசேரி ஒரு காலாண்டிற்கு 20 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதன்படி, திறைசேரி வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபாவை இதற்காக செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த செயல்முறை 2022 ஒக்டோபர் 01 முதல் நிறுத்தப்பட்டது.
50% இற்கும் அதிகமான சிரேஷ்ட பிரஜைகள் தங்கள் வட்டித் தொகையை மாதந்தோறும் பெறுகின்றனர். தற்போதைய நிதி நிலைமையின் படி இதற்காக வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபா கூடுதல் தொகையை அரசாங்கத்தால் தாங்க முடியாது என்பது மிகத் தெளிவாக உள்ளது.
2022 ஒக்டோபர் வரை நடைமுறையில் இருந்த சிரேஷ்ட பிரஜைகளின் வட்டியை வழங்குவதற்கான கூடுதல் பணத்திற்காக 17 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 108 பில்லியன் ரூபாவாகும்.
வற் வரி அதிகரிக்கப்பட வேண்டும்
வருடத்திற்கு தேவைப்படும் 80000 மில்லியன் ரூபா மேலதிகத் தொகையைப் பெற்றுக்கொள்ள, தற்போதைய வற் வரியின் மதிப்பு 1% இனால் அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில், சில சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வழங்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டால், அதற்கான பணத்தைத் திரட்டும் வழியையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
மத்திய வங்கியின் கொள்கையானது வட்டி விகிதங்களைக் குறைத்து, இலாபம் ஈட்டுவதற்கு போட்டி முறையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகும்.
கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து 30% வங்கி வட்டி விகிதத்தை நெருங்கி, மக்கள் கடன் பெறுவதற்கு கூட மூலதனத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், நாடு வங்குரோத்தாகிப்போனதைப் பார்த்தோம்.
அந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே இந்த நேரத்தில் முக்கியமானது என்பதை வலியுறுத்த வேண்டும்.“ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |