வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு, வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
அதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சூரியன் உச்சம்
மேலும், சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (06) நண்பகல் 12.12 அளவில் லெல்லோப்பிட்டி, பலாங்கொடை, புலத்சிங்கள, கல்தோட்டை மற்றும் வாத்துவை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |