முரண்பாடுகள் உச்சம் : அவசரமாக கூடுகிறது இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு
இலங்கை தமிழரசு கட்சியின் உட்கட்சி முரண்பாடு, தமிழர் தாயகத்திலுள்ள மக்களின் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் கட்சியின் உத்தியோகபூர்வமான மத்திய குழுக் கூட்டமாக இது நடைபெறாது என உட்கட்சி வட்டாரங்கள் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளன.
தடைக்கு மத்தியில் சந்திப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி, திருகோணமலை மற்றும் யாழ் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கட்சியின் உட்கட்சி முரண்பாடு, உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அழைப்பு விடுக்கப்படவில்லை
எவ்வாறாயினும் இந்த சந்திப்பிற்கு தமக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடைகோரி வழக்கு தாக்கல் செய்தவருமான பீற்றர் இளஞ்செழியன் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |