கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் முக்கிய பொருள்
மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கான் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலைய கொள்கலன் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விடுவிக்க சுகாதார அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயந்திரம் டிசம்பர் 16ஆம் திகதி விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் இத்தகைய இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட வேண்டும் எனினும் விமான நிலைய களஞ்சியசாலைகளில் அவ்வாறான நிலை உள்ளதா என்பது கேள்விக்குறியே என சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இயந்திரத்தின் நல்ல செயற்பாடு
இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் இயந்திரத்தின் நல்ல செயற்பாடு பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், களஞ்சியசாலைக் கட்டணமாக சுமார் 2 மில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொள்கலன்களை விமான நிலைய களஞ்சியசாலையில் இருந்து விரைவில் விடுவிக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்தக் கொள்கலன்களை அழிக்கவோ அல்லது ஏலம் விடவோ நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பொது வைத்தியசாலையில்
தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் CT ஸ்கான் இயந்திரம் 18 வருடங்கள் பழைமையானது எனவே தொடர்ச்சியாக பழுதடைந்த நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மாத்தறை மாவட்டத்திலேயே மாத்தறை பொது வைத்தியசாலையில் சி.டி பரிசோதனை வசதி உள்ளதால், கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த இந்த இயந்திரத்தை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு வழங்க சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |