சோமாலியாவாகும் நாடு
இலங்கையில் வாழும் சிறார்கள் அதிகளவு ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச அமைப்புக்களான 'யுனிசெவ்' மற்றும் 'சேவ் த சில்ரன்' ஆகியவை சுட்டிக்காட்டியிருக்கின்றன.
அண்மையில்இ இதுபற்றி ஜேர்மனிய ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சரியான பதிலை வழங்க முடியாவிட்டாலும் இதன் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்தக் கோபத்துடன் இந்தியாவுக்குப் பயணமான அதிபர் இந்தியாவிடமிருந்து பால் உற்பத்தி தொடர்பான அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பெற்றுக்கொள்வதற்கு கலந்தாலோசித்திருக்கின்றார்.
அரசின் திட்டங்கள்
இலங்கையர்களின் நாளாந்த பால் தேவையின் 40 வீதமானவை மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகுதி 60 வீதமான பால் தேவையினை இலங்கை வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கின்றது.
அதற்காக வருடந்தோறும் செலவிடும் தொகை 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த பத்தாண்டுகளாக இதுதான் நிலைமையாகும். இந்த நிலமைமையைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் பால் தேவையையும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் நிவர்த்திசெய்ய அரசினால் முன்னேற்றகரமான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.
ஆனால் இலங்கைக்கு மிகவும் அண்மித்ததாகவும் அவசரத்துக்கு உதவும் அயலவனாகவும் இருக்கின்ற இந்தியா பால் உற்பத்தியில் வெற்றிகரமான நாடாகக் காணப்படுகின்றது.
இந்திய மக்கள் நாளாந்த தேவைக்குப் பயன்படுத்தும் அவசிய உணவாகப் பாலும் பால்சார்ந்த உற்பத்திப் பொருட்களும் காணப்படுகின்றன. பாரியளவு சனத்தொகையைக் கொண்டிருக்கும் இந்தியாவினால் தன் சொந்தப் பால் தேவையை பூர்த்திசெய்துகொள்ள முடிவதோடு ஏற்றுமதியிலும் ஈடுபட முடிகின்றது.
பாரிய கைத்தொழில்
குடிசைக்கைத்தொழில் தொடங்கி பாரிய கைத்தொழில் வரை கால்நடை வளர்ப்பு வளர்ந்திருக்கின்றது. இதனால்தான் இந்தியா உலகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னணி வகிக்கின்றது.
பால் உற்பத்தி மாத்திரமின்றி கால்நடைகளால் பெறப்படும் ஏனைய ஊட்டச்சத்துக்களான இறைச்சி பதப்படுத்தப்பட்ட பால்,நெய், தயிர் போன்ற உற்பத்திகளிலும் முன்னணி வகிக்கின்றது.
இந்தியாவை விட பன்மடங்கு குறைந்தளவிலான சனத்தொகையையும் உடல் உழைப்பைத் தரக்கூடிய மக்கள் தொகுதியினரை அதிகளவினராகவும் பல்லாயிரக்கணக்கான மேய்ச்சல் தரைகளையும் கொண்டிருக்கும் இலங்கையினால் பால் உற்பத்தியில் ஏன் இந்த முன்னேற்றத்தை அடையமுடியவில்லை?
2.8 மில்லியன் ஹெக்ரேயர் மேய்ச்சல் நிலத்தையும்1.5 மில்லியன் கால்நடைகளையும் கொண்டிருக்கின்ற இலங்கையினால் பால் உற்பத்தி விடயத்தில் ஏன் முன்னேற்றமடைய முடியவில்லை? அதற்குக் காரணமே இந்நாட்டின் அரசியலை மையம் கொண்டிருக்கின்ற சிங்கள பௌத்த இனவாதம்தான்.
இனவாதம்
உதாரணத்திற்கு மயிலத்தமடு – பெரியமாதவனை பண்ணையாளர்களது பிரச்சினையை அரசு கையாளும் விடயத்தை எடுத்துக்கொள்ளலாம்.
குறித்த பண்ணையாளர்கள் இன்றைக்கு நாற்பது நாளுக்கு மேலாக மேய்ச்சல்தரையில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளையும் நிறுத்தக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கையில் அதிகளவு மேய்ச்சல் நிலத்தைக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியமாதவனை மயிலத்தமடு கெவிலியாமடு போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகள் காணப்படுகின்றன.
இவ்விடங்களில் மொத்தமாக கிட்டத்தட்ட 9000 ஏக்கர் மேய்ச்சல் தரையும் அவற்றில் மூன்றரை லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையான நாட்டு மாடுகளும் பயன்பெறுகின்றன. இதில் கெவிலியாமடு மேய்ச்சல் நிலமானது தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
பெரியமாதவனை மயிலத்தமடு
இராணுவத்தினரின் பகுதிகளுக்கு செல்லாமல் மாடுகளை மேய்த்துவரமுடியும் என்கிற நிலை காணப்படுகின்றது. அதுபோல பெரியமாதவனை மயிலத்தமடு ஆகிய இடங்களை உள்ளடக்கிய 8242 ஏக்கர் மேய்ச்சல் நிலமும் தற்போது மாடுகளை மேய்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மகாவலி டீ வலயத்தினுள் உள்வாங்கப்பட்டிருக்கும் இந்த மேய்ச்சல் நிலத்தின் பெரும்பகுதியானது சிங்கள மக்களை குடியேற்றும் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
பொலன்னறுவை,அம்பாறை ஆகிய மாவட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்கள் இந்த மேய்ச்சல் நிலத்திலிருந்து தமக்கான விவசாயக் காணிகளை எவ்வித அரச அனுமதியுமின்றி சுயமாக உருவாக்கிக்கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இவ்வாறு புதிய விவசாய நிலங்களை உருவாக்குவதற்காக இதுவரை கால்நடைகள் மேய்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களின் புற்களை அழித்து வரம்புகளை அமைத்துள்ளனர்.
மேய்ச்சல் நிலத்தை உழவு இயந்திரங்கள் கொண்டு உழுது சேதப்படுத்தியிருக்கின்றனர். அத்தோடு இதுவரையில் 30 இற்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை அமைத்துக் குடியேறியுள்ளனர். குடியேறியது மட்டுமல்லாது மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகளை சுட்டுக்கொன்றிருக்கின்றனர்.
மேய்ச்சலுக்காகத் தங்கியிருப்பவர்களின் தற்காலிக வீடுகளை எரித்திருக்கின்றனர். இந்த நிலமைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டும் மேய்ச்சல் நிலத்தை மீளவும் மீட்டுத் தரக்கோரியும் மயிலத்தமடு – மாதவனை கிராமங்களின் கால்நடை வளர்ப்பாளர்கள் நாற்பதிற்கும் மேற்பட்ட நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பௌத்தமயமாக்கல்
பண்ணையாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற சமநேரத்தில் அம்பிட்டிய சுமணரத்தின தேரரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தும் அவருடன் இணைந்த வேறு சில அரசியல்வாதிகளும் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் நிலத்தை அழித்து அடாத்தாகக் குடியேறியிருக்கும் சிங்கள மக்கள் வழிபட புதிய பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணிகளை முன்னெடுத்திருக்கின்றனர்.
அதற்காக முதற்கட்டமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை இராணுவம் அகற்றிவிட்டது என்பதனைக் காரணம் காட்டி பெரும் இனவாத பரப்புரையைத் தெற்கில் மேற்கொண்டுவருகின்றனர்.
எந்நாட்டுக் கலப்பினங்களையும் கொண்டிராத சுதேசிய மாட்டினங்களான மேற்குறித்த ஐந்து லட்சம் மாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபடுபடுவதற்கு மயிலத்தமடு – மாதவனை பகுதிகளைத் தவிர வேறிடமில்லை. இவ்வாறான பெருந்தொகை மாடுகளை மேய்ப்பதற்கு விவசாய நிலங்களைப் பயன்படுத்த முடியாது.
அதற்கு விவசாயிகளும் அனுமதிக்கவும் மாட்டார்கள். எனவே இவ்வளவு தொகை வளத்தையும் அழிக்க வேண்டிய அல்லது தமது தொழிலைக் கைவிடவேண்டிய நிலைக்கு மட்டக்களப்பு வாழ் கால்நடை பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பால் உற்பத்தி தொழில் நுட்பங்கள்
மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தம்மிடமிருக்கும் மாடுகளிலிருந்து நாளொன்றுக்கு மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் லீற்றர் வரையான பாலினைப் பெறுகின்றனர். இதனால் 962 குடும்பங்களைச் சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வருமானத்தைப் பெறுகின்றனர்.
மாதமொன்றுக்கு இங்கிருந்து பெறப்படும் ஒரு லட்சம் லீற்றருக்கு மேற்பட்ட பாலானது நாட்டு மக்கள் அனைவருக்குமே ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.
இரண்டாயிரம் ரூபாய்களைத் தாண்டிவிட்ட ஒரு கிலோ மாட்டிறைச்சியானது இங்கிருக்கும் விவசாயிகளிடம் வெறும் 200 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்படுகின்றது. பொருளாதார ரீதியிலும் மக்களின் நாளாந்த ஊட்டச்சத்து விடயத்திலும் நலிந்திருக்கும் இலங்கையானது தனது முன்னேற்றத்திற்கான வழிகளையே கண்டடைய வேண்டும்.
இந்நாட்டுக்குரிய அனைத்துவிதமான காலநிலை மாறுதல்களையும் தாங்கி இயற்கையான உணவுகளை உண்டு அதிக பயனைத் தரக்கூடிய மாடுகளைப் பராமரிக்கும் வழிவகைகளை மேம்படுத்த வேண்டும்.
அதற்கான மேய்ச்சல் தரை மருத்துவ வசதிகள் பால் உற்பத்தி தொழில் நுட்பங்கள் போன்றவற்றை மேம்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும். பாலுக்கு அடுத்த நிறையுணவான மாட்டிறைச்சியை இலகுவில் பெறக்கூடிய வழிவகை இங்கே இருந்தும் அதனை அழித்து நாசமாக்க எடுக்கும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும்.
இதனையெல்லாம் செய்யாதுவிடுத்து சிங்கள பௌத்த இனவாதத்தைப் பரப்பும் நோக்குடன் தமிழர்களிடமிருக்கும் அனைத்து நிலங்களையும் பறிக்கப்போகிறோம் எனச் சதித்திட்டங்களோடு புறப்பட்டால் இந்நாடு விரைவாகவே சோமாலியா ஆவதை எவராலும் தடுக்க முடியாது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Jera அவரால் எழுதப்பட்டு, 26 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.