தொடரும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற்தரை கால்நடை வளர்ப்பாளர்களின் போராட்டம்!(படங்கள்)
நான்காவது நாளாக மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற்தரை கால்நடை வளர்ப்பாளர்களின் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழையிலும் இன்று(18) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இன்றைய தினம் போராட்ட களத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள்
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
இது தொடர்பில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் சட்டரீதியற்ற முறையில் காடழிப்பு, விவசாய நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த பூரண தகவல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கிடைக்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் இதன்போது பதில் வழங்கப்பட்டுள்ளமையை நாடாளுமன்ற உறுப்பினர் பண்ணையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாகவும், தாம் எப்போதும் கால்நடைப் பண்ணையாளர்களுடன் ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.