கோட்டாபய தப்பியோடுவதற்கு நானே உதவி செய்தேன்: மாலைதீவின் முன்னாள் அதிபர் பகிரங்கம்
இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டக்காலத்தில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa ) தானே உயிராபத்தில் இருந்து காப்பாற்றியதாக மாலைதீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் (Mohamed Nasheed) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலய போராட்டம் நடந்து.
இதன்போது, இலங்கை அதிபரொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ஆம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவி செய்தேன்.
வேறு பல நாடுகளைப் போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை. உள்நாட்டு யுத்தத்தின் போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை. நாடு எப்போதும் தேர்தல் மூலமே அதிகார மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும், இலங்கையில் அதிபர் ஒருவர் ஒருபோதும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் அதிபரைக் கைது செய்ததும் இல்லை.
அதேவேளை, நான், எனது அதிபர் காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது. கொழும்பு (Colombo) அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. ஆனால், இன்றும் அதே அரசாங்கம் பதவியில் உள்ளது. அதிபர் மாத்திரம் தான் மாறியுள்ளார்.
2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன.
எனவே, நான் மாலேயில் (Malé) எதிர்கொண்ட விடயங்கள் கொழும்பில் இடம்பெற்றால் தென்னாசியா முழுவதும் அது எதிரொலிக்கும்.
மேலும், தென்னாசியா தப்பிப் பிழைக்காது என நான் கருதினேன். அத்தோடு இலங்கை மக்கள் வேறு ஒரு அரசியல் ஏற்பாட்டை செய்துகொள்வதற்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதாக நான் கருதினேன்.” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |