தவறாக வழி நடத்தும் அமெரிக்கத் தூதுவர்- சீற்றத்தில் போட் சிற்றி நிறுவனம்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தவறாக வழி நடத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கொழும்பு துறைமுக நகர நிறுவனம் (சிஎச்ஈசி) குற்றம்சாட்டியுள்ளது.
அண்மையில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று அமெரிக்காவின் தடைப்பட்டியலில் உள்ளது இதன் காரணமாக அந்த நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பு துறைமுகநகர நிறுவனம்-சிஎச்ஈசி- நாங்களோ அல்லது எங்களின் பிரதான நிறுவனமான சிசிசிசியோ அமெரிக்காவின் 2020 ம் ஆண்டு தடைப்பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவினால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள சீனா கொமினிகேசன் கொன்ஸ்டிரக்சன் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் எவற்றுடனும் நாங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என சிஎச்ஈசி போர்ட் சிட்டி கொழும்பு தெரிவித்துள்ளது.
தென்சீனாவில் மண்மீட்டாக்கப்பணிகளில் ஈடுபட்டநிறுவனங்களையே அமெரிக்கா தடை செய்துள்ளது,கொழும்பு துறைமுக நகரத்திற்காக சிஎச்ஈசி போர்ட் சிட்டி கொழும்பு முன்னெடுத்த மண்மீட்டாக்க நடவடிக்கைகள் முற்றிலும் வேறு நிறுவனங்களாலேயே முன்னெடுக்கப்பட்டன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் குறித்த பக்கச்சார்பான புரிந்துணர்வுடன் அலைனா பி டெப்பிளிட்ஸ் வெளியிட்ட கருத்துக்களை தெளிவுபடுத்துவதே தங்களின் நோக்கம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.