சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவிதுள்ளார்.
“சிலரைக் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்படுகின்றனர். இந்த விசாரணைகளில் விரைவில் முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என சரத் பொன்சேகா மேலும், கூறியுள்ளார்.
நாட்டைச் சூறையாடிய ராஜபக்சர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆர்வத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தான் கருதுவதாகவும், இதனை வரவேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு உரிமையுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ராஜபக்சர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் நாட்டைச் சூறையாடியதாக தான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டரீதியான விசாரணை
ஷிரந்தி ராஜபக்ச தொடர்பாகவும் சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும். பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்.

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என யாராவது எதிர்பார்ப்பது முட்டாள்தனமான விடயம்.
அவ்வாறான முடிவு நாட்டுக்கு விரும்பத்தக்கதல்ல. நாமல் அரசியலில் முன்னேறுவதற்கான பாதை திறந்தே இருக்கின்றது. அவர் அந்தப் பாதையில் செல்லலாம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |