இலங்கையில் மீண்டும் ஆபத்து அதிகரித்தது! அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
சுகாதாரச் சட்டங்களைப் புறக்கணித்து பலர் தன்னிச்சையாகச் செயல்படுவதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கோவிட் தொற்றுக்குள்ளான ஏழு சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 16 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தீபால் பெரேரா தெரிவித்தார்.
மக்கள் சுகாதார சட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறிய நிபுணர், முகமூடி அணிவது உட்பட சரியான சுகாதார விதிகளை பின்பற்றுவது முக்கியம் என்றும் கூறினார்.
குறிப்பாக பெற்றோர்கள் தேவையற்ற பயணங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும், குறிப்பாக குழந்தைகளை உல்லாசப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும், இல்லையெனில் பள்ளிகளைத் திறப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக மதுபான விருந்துகள் கொரோனாவை உருவாக்கும் பிரதான இடமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை அவ்வாறான இடங்களை பெற்றோர்கள் தவிர்க்குமாறும் திரு.தீபால் பெரேரா தெரிவித்தார்.