வட்டுக்கோட்டையில் வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் படுத்துக்கிடக்கும் கட்டில்கள்
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், தாதியர்கள் வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 80 கட்டில்களும், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 20 கட்டில்களும் புனர்வாழ்வு அமைச்சிடம் இருந்து நாங்கள் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் போதா குறை காணப்படுகிறது. ஆனால் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் கட்டில் மேல் கட்டில் படுத்திருக்கிறது.
நாங்கள் பல தடவைகள் கேட்கின்றோம் ஒரு தகுதியான தாதியர், இரவு கடமைக்கு ஒரு வைத்தியர் ஆகியோரை வழங்குமாறு. பென்சுலினை வழங்குவதற்கு ஒரு தாதியரை கேட்கின்றோம்” என்றார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
“இரண்டு மருத்துவ உத்தியோகத்தருக்கு மாத்திரமே பணி நிலை காணப்படுகிறது. இரவில் மருத்துவர் கடமையில் இருக்க வேண்டும் என்றால் 4 மருத்துவ உத்தியோகத்தராவது பணியில் இருக்க வேண்டும்.
இம்முறை மருத்துவ உத்தியோகத்தர் மற்றும் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்புக்கு அனுப்பியுள்ளோம்.
நாட்டின் நிலைமை காரணமாக கடந்த சில வருடங்களாக பணி நியமனம் செய்யப்படவில்லை. அதனாலேயே இந்த நிலை உருவாகியுள்ளது. எனவே எங்களுக்கு அனுமதி கிடைத்ததும் இந்த விடயத்தை சீர் செயாவோம்” என்றார்.
இது குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தெரிவிக்கையில்,
பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது நிதியுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால் அது வந்த பின்னர் தான் நியமிக்கலாம்.
அதற்கிடையில் தேவை ஏற்பட்டால் அயல் வைத்தியசாலையில் இருந்து தற்காலிகமாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |