இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கொரோனாவால் மூவர் உயிரிழக்கும் அபாயம்
இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற பரிதாபகரமான நிலைமை ஏற்படப்போவதாக இலங்கை மருத்துவச் சபையின் உப தலைவர் விசேட மருத்துவ நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போது கொவிட் வைரஸ் பரவல் காரணமாக, இலங்கை மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்ரீலங்காவின் சுகாதார தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் கடந்த காலத்தில் நாளாந்தம் 20 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் 2000 தொடக்கம் 3000 வரையிலான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர் என ஸ்ரீலங்கா மருத்துவச் சபையின் உப தலைவரான மருத்துவர் மனில்க சுமனதிலக்க கூறியுள்ளார்.
எனினும் இன்று வெறும் 10 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனையே நடத்தப்படும் போதிலும் 2 ஆயிரம் தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக மேலும் சில மருத்துவமனைகள் அவசர நிலையை அறிவித்துள்ளன. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் காலி − கராபிட்டிய போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகள் நேற்று அவசர நிலையை அறிவித்திருந்தன.
இந்த நிலையில் வைத்தியசாலைகளில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையும் அவசர நிலையை இன்று பிரகடனப்படுத்தியுள்ளது.
மேலும், கண்டி உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக மேலதிக விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், படுக்கை வசதிகளுக்கு மேலதிகமாக நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் கூட, இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு இவ்வாறான சவால்களை எதிர்நோக்கவில்லை என கூறப்படுகின்றது.
2004ஆம் ஆண்டில் சுனாமி தாக்கிய சந்தர்ப்பத்தில், இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், அந்த சந்தர்ப்பத்திலும் நிலைமை விரைவில் வழமைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தற்போதைய கொவிட் தொற்று நிலைமை பாரிய நெருக்கடிக்கு வழிகோலியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.