தமிழரை வஞ்சம் தீர்த்த சீக்கியர்கள்
ஈழ மண்ணில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களில் சீக்கியர்களே அதிக அளவு அங்கம் வகித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக அதிக கொலைகள், பாலியல் வல்லுறவு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் இந்தியப் படையில் இருந்த சீக்கிய ஜவான்களே என்று பாதிக்கப்பட்ட பலரும் சாட்சி பகர்கின்றார்கள்.
தலைப்பாகை, தாடி சகிதமாக இந்தியப் படையில் வலம் வந்த சீக்கியப் படையினர், ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தார்கள்.
இதற்கு காரணம் என்ன? ஈழத்திற்கு அனுப்பப்பட்ட இந்தியப் படை அணிகளில் சீக்கியப் படையினர் அதிக அளவு அங்கம் வகித்தது இதற்கான காரணங்களில் ஒன்று என்றாலும், ஈழத்தமிழருக்கு எதிராக அதிக வன்முறைகளில் சீக்கியர்கள் ஈடுபட்டதற்கு அதைவிட வேறு சில உட்காரணங்களும் இருந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது.
தென்இந்தியரை வெறுத்த சீக்கியர்கள்
சாதாரணமாகவே சீக்கியர்களுக்கு தென் இந்தியரைப் பிடிப்பதில்லை. இந்தியா சுதந்திரமடைந்து சிறிது காலத்தில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், தனித் தமிழ் நாடு பிரிவினைவாதக் கோரிக்கை திராவிடக் கழத்தினரால் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்தும், தமிழ் மக்கள் மீது வட இந்தியர்கள் தீராகப் படைகொண்டே வந்துள்ளார்கள்.
நாஸ்திகக் கொள்ளைகள் திராவிட அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு, தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படைதைத் தொடர்ந்து, மதவாத அடிப்படைவாத அமைப்புக்கள் திராவிடர்களுக்கு எதிராக காழ்ப்புணர்வை நாடுமுழுவதும் வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள்.
ஹிந்தி மொழியை தேசிய மொழியாக பிரகடனப்படுத்தி இந்திய நடுவன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, தமிழ் நாட்டில் இருந்து பாரிய எதிப்புக்கள் கிளம்பி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் கூட, வட இந்தியர்களை தென் இந்தியத் தமிழர்களிடம் இருந்து பெருமளவில் அன்னியப்படவே வைத்திருந்தது.
பொதுவாகவே வட இந்தியர்களுக்கும், தென் இந்தியத் தமிழர்களுக்கும் இடையில் பேதங்கள் தொடர்ந்தவண்ணமே இருந்தன.
(திராவிடர்கள் மீதான ஆரியர்களின் ஆக்கிரமிப்பு வரலாறு வேறு பல சந்தர்ப்பங்களிலும், பல அரசியல்வாதிகளால் கிழறப்பட்டு, இந்த பேதங்களின் வீச்சை மென்மேலும் அதிகரித்தவண்ணமே இருந்தன.) இலங்கை வந்திறங்கிய சீக்கியப் படைவீரர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், தென் இந்திய வழித்தோன்றல்களாக இனங்காணப்பட்ட ஈழத்தமிழர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு செயற்பட்டது ஒன்றும் வியப்பிற்குரிய விடயம் கிடையாது.
வஞ்சம் தீர்த்த சீக்கியர்கள்
சீக்கியர்கள் ஈழத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதற்கு மிகவும் இயல்பான மற்றொரு காரணமும் கூறப்படுகின்றது.
சீக்கியப் படை அணிகளுக்கு விடுதலைப் புலிகளுடனான ஆரம்பச் சண்டைகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான இழப்புக்களே, சீக்கியர்கள் ஈழத்தில் அதிக வஞ்சத்துடன் செயற்பட்டதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஓரளவு உண்மையும் இல்லாமல் இல்லை. செப்டெம்பர் மாதம் 11ம் திகதி நள்ளிரவு யாழ் மருத்துவ பீட மைதானத்தில் தரையிறங்கிய 13வது சீக்கிய மெது காலாட் படையின் (13 – Sikh Light Infantry) அங்கம் வகித்த 30 சீக்கியர்களும் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விதம் பற்றி பலவேறு கதைகள் இந்தியப் படையினர் மத்தியில் பரவியிருந்தன. இது மற்றைய சீக்கிய படையினரிடையே அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதிக ஆவேசத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால்தான் சீக்கியப் படை வீரர்கள் ஈழத்தில் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள் என்றும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.
பழிக்குப் பழி
இவை அனைத்தையும் விட, ஈழத் தமிழர்கள் மீது சீக்கியர்கள் வெறுப்புடனும், பழிதீர்க்கும் மனோபாவத்துடனும் நடந்துகொள்வதற்கு மற்றொரு உட் காரணமும் இருப்பதாக நம்பப்படுகின்றது. 1984ம் ஆண்டு சீக்கியர்கள் பெரும்பாண்மையாக வாழும் பஞ்சாபில் இந்திய இராணவத்தினர் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.
புளூ ஸ்டார் இராணுவ நடவடிக்கை என்று அதற்கு பெயரிடப்பட்டிருந்தது. சீக்கிய வீரர்கள் தமிழர்களுக்கு எதிராக அதிக கோபம் கொண்டு செயற்பட்டதற்கு, இந்த இராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.
பஞ்சாப்பை இந்தியாவில் இருந்து தனி நாடாக பிரிப்பதற்கென்று கூறி சீக்கியர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தார்கள். அவ்வாறு பஞ்சாப்பைத் தனி நாடாக பிரிப்பதற்கு சீக்கியர்கள் கூறும் காரணங்கள் நியாயமானவைகள் தான் என்றாலும், இந்தியாவின் நடுவன் அரசு அதற்கு இணங்கவில்லை.
இரும்புக்கரம் கொண்டு சீக்கியர்களின் போராட்டத்தை நசுக்க முற்பட்டது. சீக்கிய தீவிரவாதிகள் பஞ்சாபிலுள்ள பொற்போவிலினுள் தஞ்சமடைந்திருந்தார்கள்.
சீக்கியர்களின் அதி உன்னத வணக்கஸ்தலமான பொற்கோவிலினுள் சீக்கியர்களைத் தவிர வேறு மதத்தவர்கள் எவருமே அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு நாள் இந்திய இராணுவம் பொற்கோவிலுள் நுழைந்து பொற்கோவிலை இரத்த வெள்ளத்தால் நனைத்தது. பல சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.
சீக்கியத் தலைவரும், பெரும்பாண்மையான சீக்கியர்களால் மதிக்கப்படட்வருமான பிரிந்தன்வால் என்ற தலைவர் இந்திய இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டார். சீக்கியர்களின் புனிதம் பேணும் ஸ்தலம் மிகவும் அசிங்கப்படுத்தப்பட்டது.
இராணுவ நடவடிக்கை
புளூ ஸ்டார் (Blue star) என்று பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சீக்கியர்கள் மனங்களில் ஆறாத ரணமாகியது. சீக்கியர்களால் எந்த ஒரு காலத்திலும் மறக்கவும், மன்னிக்கவும் முடியாத ஒரு நிகழ்வாகவே இந்த இராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது.
சரி, இந்தச் சம்பவத்திற்கும், தமிழ்மக்கள் மீது சீக்கியர்கள் காழ்ப்புணர்வு கொள்ளுவதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேள்வி எழுப்பக் கூடும்.
உண்மையிலேயே சீக்கியர்களுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்டினாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பின்நாளில் இந்தியப் படைகளின் பிரதம தளபதியாக பணியாற்றிய கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி என்ற தமிழரே அந்த பொற்கோவில் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி இருந்தார்.
சீக்கிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து அட்டூழியங்களுக்கும் தெரிந்தோ, தெரியாமலோ தமிழர்கள் ஒரு வகையில் காரணமாகி விட்டிருந்தார்கள். இதுவே தமிழ் மக்கள் மீது சீக்கியர்கள் தீராப்பகை கொள்ளக் காரணமாக அமைந்திருந்தது.
சீக்கியத் தலைவர் பிருந்தன்வாலே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கும் மெட்ராஸ் ரெஜிமெட்டைச் சேர்ந்த படைப்பிரிவினரே பொறுப்பாக இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.
பிரிந்தன்வாலேயைக் கொலை செய்வதற்கென்று தமிழர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படை இந்திய இராணுவத்தில் உருவாக்கப்பட்டு, புளூ ஸ்டார் இராணுவ நடவடிக்கையின் போது அந்த அணியும் அனுப்பப்பட்டிருந்தது. இராணுவ நடவடிக்கைளின் போது இடம்பெற்ற எந்தவொரு சண்டைகளிலும் அந்தச் சிறப்பு அணி கலந்துகொள்ளவேயில்லை.
பொறுமையுடன் காத்திருந்து, பிரிந்தன்வாலேயின் தலை தெரிந்ததும் அந்தச் சிறப்பு அணி செயற்பட்டது. அவரைப் படுகொலை புரிந்தது. இராணுவ நடவடிக்கை முடிந்ததும் இந்த விடயம் ஊடகங்களில் மிகவும் பிரபல்யப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
பஞ்சாபில் இராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டு திரும்பிய இந்தியப் படையினருக்கும், நடவடிக்கையை தலைமை தாங்கி நடாத்திய கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீக்கும் தமிழ் நாட்டில் பாரிய வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்திரா காங்கிரஸ் கட்சியினரே இதனை ஏற்பாடு செய்திருந்தாலும், தமிழர்கள் வழங்கிய வரவேற்பாகவே இது நோக்கப்பட்டது. பிரச்சாரமும் செய்யப்பட்டது. இவை எல்லாமே சீக்கியர்கள் தமிழர்கள் மீது காழ்ப்புணர்வும், தீராப் பகையும் கொண்டு செயற்படுவதற்கு அடிப்படைக்காரணங்களாக அமைந்திருந்தன.
ஈழத்தில் சீக்கியர்கள் மிகக் கொடூரமாகச் செயற்பட்டதற்கும் இதுவே காரணம். ஈழத்தில் இருப்பவர்கள் தமிழர்கள். தமிழ் நாட்டவர்களின் வழித் தோன்றல்கள்.
தமிழ் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பவர்கள். சீக்கியர்கள் ஈழத்தமிழர்கள் மீது பழிவாங்குவதற்கு இதை விட வேறு காரணம் வேண்டுமா?
தொடரும்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |