ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஆறாத ரணங்களை பேசுகிறது “ஆறாம் நிலம்”
ஐபிசி தமிழின் தயாரிப்பில் உருவான, ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் “ஆறாம் நிலம்” திரைப்படம் எமது யூரியூப் தளத்தில் (https://www.youtube.com/c/IBCTamil) உத்தியோகபூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமிது.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை தொடப் படாத ஒரு களம் இதில் பேசப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வசித்துவரும் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான துயரங்களையும் என்றைக்கும் ஆறாத ரணங்களின் மீது குத்திப் பார்க்கும் தற்காலச் சூழ்நிலையை இது எடுத்துக் காட்டுகிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்தான் சங்கத் தமிழன். ஆனால் இந்த ஐந்திலும் அடங்காத - அதை விட மோசமான நிலையில் சிக்கிச் சிதறி ஆறாம் நிலமாகக் கிடக்கும் இன்றைய ஈழத்தைப் பற்றிய படம்தான் இது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் போது இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அப்படிச் சரணடைந்தவர்களின் நிலை என்ன? 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர்களது நிலை என்ன? என்பதை சிறிலங்கா அரசாங்கம் சொல்ல மறுக்கிறது.
சரணடைந்தவர்களைக் காணாமல் போனோர் என்றழைக்கின்றனர். அப்படிக் காணாமல் போனோரின் உறவுகள் ஆண்டுக்கணக்கில் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. சர்வதேச சமூகமும் காண மறுக்கிறது. ஏனெனில், காணாமல் போனோரின் உறவுகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களை யாரும் அறியாததுதான். அவர்களின் துயரங்களை சிறிலங்கா அரசுக்கும் சர்வதேசச் சமூகத்துக்கும் புரிய வைக்கும் முயற்சிதான் ஆறாம் நிலம் திரைப்படம்.
கணவன் இல்லாமல் மனைவியரும், அப்பா இல்லாமல் குழந்தைகளும் தவிக்கும் தவிப்புகள் உலகத்துக்குச் சின்ன விசயம். ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உலகளவு கொடுமை என்பதை முகத்திலறைந்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆனந்தரமணன்.
போருக்குப் பின் அன்றாட வாழ்க்கைக்காக அவர்கள் படும் கஷ்டங்கள், அரசாங்க நிர்வாகிகள், உளவுத்துறையினர், இராணுவத்தினர் ஆகியோரால் பெண்கள் படும் அவஸ்தைகள் கண்களைக் கசியவைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
முதன்மைப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நவயுகாவும் அவருடைய பெண்குழந்தையாக நடித்திருக்கும் தமிழரசியும் மிகமிகப் பொருத்தமாக நடித்து காண்போரைக் கலங்கவைத்துவிடுகிறார்கள்.
அதுவும் அந்தக் குழந்தை, அப்பாவோடு உந்துருளியில் பயணிக்கும் குழந்தையுடன் கூடிய விளம்பரப்பலகைகளைப் பார்த்து ஏங்குவதும், அவ்விளம்பரங்களில் காலத்துக்கேற்ப உந்துருளிகள் நவீனமாகிக் கொண்டே இருப்பதும் திரைமொழிக்கு மெருகூட்டியுள்ளது.
இவ்வாறான ஈழத்து சோகச்சுவடுகளை தாங்கிய, ஈழத் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் வலியின் சிறுதுளிதான் இந்தப்படம்.