ஈழ இந்திய புகலிட எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக லண்டனில் புத்தக கண்காட்சி
ஈழ இந்திய புகலிட எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக லண்டனில் இரு நாட்கள் கொண்ட தமிழ் புத்தக கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சி இம்மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் Kerala House, 671, Romford Road, Manor Park, Eastham, E12 5AD எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஈழ, இந்திய, புகலிட எழுத்தாளர்களை கௌரவிக்கும் முகமாக புத்தகங்களும் சஞ்சிகைகளும் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிப்பற்றை ஊட்டி வளர்க்கவும்
குறித்த கண்காட்சியில் 500 க்கும் மேற்பட்ட தலைப்புக்களில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டவுள்ளன. வாசிப்பு பழக்கம் அருகிவரும் இன்றைய சூழலில், அதுவும் புலம்பெயர் நாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சியை நடத்துவது காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது.
இங்குள்ள அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மொழியையும், எம்மொழியில் உள்ள புத்தகச் செல்வங்களையும் அறிமுகம் செய்வதோடு, அவர்களிடத்தே மொழிப்பற்றை ஊட்டி வளர்க்கவும் இந்தப் புத்தகக் கண்காட்சி உதவும் என ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.
இருநாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியில் அரங்க நிகழ்வுகளும் எழுத்தாளர்களுடனான சந்திப்புக்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் உரை
குறித்த நிகழ்வில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு எழுத்தாளர் மு. நித்தியானந்தன் ‘வீடுகளில் நூல்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
குறிப்பாக புகலிட நாடுகளில் வாசிப்பு மற்றும்புத்தகப் பண்பாடு குறித்து இந்த உரையில் அவர் விளக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் சனிக்கிழமை 18 ஆம் திகதி காலை 11 மணிக்கு ‘வனத்தில் அலைதல்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் தமிழ்க்கவி உரை நிகழ்த்தவுள்ளார்.
