டுபாயில் உலகளாவிய அதிசயம் : நீரில் மிதக்கும் மூன்றடுக்கு மசூதி
உலகின் முதல் மிதக்கும் மசூதியை, பெரும் பொருட்செலவில் டுபாயில் அமைப்பதற்கான பணிகளை அமீரக அரசு நேற்று ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசு சார்பிலான இந்த திட்டத்தில் டுபாயின் கவர்ச்சிக்கு கூடுதல் அம்சமாகவும், இஸ்லாமிய சுற்றுலாவின் அங்கமாகவும் மிதக்கும் மசூதி அமைந்திருக்கும் எனவும் இதன் மூலம் அமீரகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 3 சதவீதம் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மசூதியானது மொத்தம் 3 அடுக்குகளில் கட்டமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு முதல் தளம் தண்ணீருக்கு அடியில் அமையும். இங்கே ஒரே நேரத்தில் 75 பேர் கூடி தொழுகை நடத்த முடியும்.
இஸ்லாமிய மதத் தலம்
இரண்டாவது தளம் பல்நோக்கு மண்டபமாகவும், மூன்றாவது தளம் இஸ்லாமிய கண்காட்சியகமாகவும் அமைக்கப்பட இருக்கிறது.
மிதக்கும் மசூதியின் கட்டுமானச் செலவாக அமீரக திர்ஹாம் மதிப்பில் 55 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிதக்கும் மசூதி நடைமுறைக்கு வரும்போது உலகளாவிய ரீதியில் முதன்மையான இஸ்லாமிய மதத் தலங்களில் ஒன்றாக அது அமையும் எனவும் கணித்துள்ளனர்.
முக்கியமாக முஸ்லிம் அல்லாதவர்களும் இந்த மசூதிக்கு செல்ல அனுமதிக்க முடிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.