மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கைவரிசை! சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞர்கள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட இருவரை ஏறாவூரில் வைத்து கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
“மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோய்காக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த திருட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர் 5 கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற அதன் இரகசிய எண் கொண்ட லொக்கை(phone lock) உடைத்து தருமாறு அந்த கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உடனடியாக சம்பவ இடத்தை முற்றுகையிட்ட காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்து விசாரணையின் போது குறித்த தொலைபேசிகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திருடி உள்ளதாக தெரிய வந்துள்ளதையடுத்து கடை உரிமையாளர் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட 18 கையடக்க தொலைபேசிகள் மற்றும் கணணி ஒன்று உட்பட உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்தவர்களை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த இளைஞன் கிழமையில் ஒரு நாள் வைத்தியசாலைக்குள் நுழைந்து தங்கியிருக்கும் நோயாளர்களின் கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், மலசல கூடம் செல்லும் போது அவர்களின் கையடக்க தொலைபேசி பணம் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பார்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகளை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருடி வந்துள்ளதாகவும் அதை ஏறாவூரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை மற்றும் திருத்தம் குறித்த கடையில் கொடுத்து பின்னர் அதனை விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |