நாட்டில் பணம் இல்லை -வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் நாமல்
நாட்டில் தற்போது பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது வெளியாகி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பண்டோரா பேப்பரில் உலக செல்வந்தர்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதன்படி விளையாட்டுத் துறையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Saminda Wijesiri) நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் உள்ள சில விளையாட்டுகளில் முறைகேடான இலாபத்தை முதலீடு செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,
கறுப்பு பணம் வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுகிறது. அனைத்து விளையாட்டு சங்கங்களும் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினை நிதிப் பற்றாக்குறையாகும் என பதில் வழங்கியுள்ளார்.
அனைத்து விளையாட்டு சங்கங்களையும் அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடுமாறும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.