அதிகளவில் வரி நிலுவை : மதுவரி ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று பிரதான அரச வருமான மூலங்களில், பாரிய நிலுவைத் தொகை இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி (MJ Gunasiri) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மதுவரி ஆணையாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு கருத்துத் தெரிவித்த மதுவரி ஆணையாளர் நாயகம் “நிதி அமைச்சின் கீழ் அரச வருமானத்தை ஈட்டித்தரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று நிறுவனங்களும் சட்டக் கட்டமைப்பிற்குள் உரிய வரிகளை வசூலிக்கின்றன.
வரி நிலுவை
ஆனால் இந்த நாட்டில் அதிகளவு வரி நிலுவை இருப்பதாக ஒரு மாயையைப் பரப்ப சில குழுக்கள் செயல்படுகின்றன. இந்த மூன்று நிறுவனங்களிலும் நிலுவையாக உள்ள வரிகளின் மொத்தத் தொகை 90 பில்லியன் ரூபாய்க்கும் குறைவு என்பதைக் கூற வேண்டும்.
அந்த வரி வருமானத்தைச் செலுத்த வேண்டிய நிறுவனங்களில் பெரும்பாலானவை அரச நிறுவனங்கள் என்பதை குறிப்பிட வேண்டும். ஏனைய நிறுவனங்களிடமிருந்து வரிப் பணத்தை வசூலிக்க நீதிமன்றங்களை அணுகியுள்ளோம்.
இதன்படி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று நிறுவனங்களும் 2023ஆம் ஆண்டில் 3 டிரில்லியன் ரூபாயைத் தாண்டி, வரலாற்றில் அதிகூடிய வருமானத்தைப் பெற்றுள்ளன.
நீதிமன்ற நடவடிக்கை
25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்மைக் கணக்கில் மேலதிகத்தை உருவாக்க முடிந்தது என்பதையும் கூற வேண்டும். இவ்வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை எமது திணைக்களம் 132.4 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், எங்கள் நிறுவனத்தின் நிலுவைத் தொகை 1040 மில்லியன் ரூபாயாகும். ஆனால் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் அதிலிருந்து 609 மில்லியன் ரூபாயை வசூலிக்க முடிந்தது.
ஏனைய அனைத்து வரி நிலுவைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |