எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்- ரஞ்சன் ஜயலத்
நீர் மின் உற்பத்தியை தற்போதைய நிலைக்கு மட்டுப்படுத்தி, தண்ணீரை சேமிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலத் (Ranjan Jayalath) தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதற்கு மாற்று வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அனல் மின் நிலையங்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் இல்லையேல் எதிர்காலத்தில் மின் நெருக்கடி அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருள் தவணை முறையில் விநியோகிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் அவ்வப்போது செயலிழந்தமையும் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.
இச்சூழ்நிலை காரணமாக நீர் மின் நிலையங்கள் அதிகளவில் இயங்கும் நிலையில் எதிர்வரும் காலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது மலையகத்தில் வறட்சியான காலநிலை நிலவுவதால் ஆறுகளிலும் நீரோடைகளிலும் நீர் குறைவடைந்து செல்கின்றன.
அத்துடன் மலையகத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் நீர் ஊற்றுக்களிலிருந்து வரும் நீரை சேமித்து வைக்கக்கூடிய முறை ஒன்று இல்லாதமை வறட்சியான காலங்களில் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமை தொடருமானால் எதிர் வரும் வாரங்களில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதற்குச் சாத்தியம் நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.