சுற்றுலா வந்த பிரிட்டன் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
பிரித்தானியப் பெண் ஒருவர் கொள்வனவு செய்த தங்கம் திருடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து களுத்துறை வடக்கு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (28) இரவு 11 மணியளவில் லின்டா பிரவுன்மன் என்ற 75 வயதுடைய பிரித்தானியப் பெண்ணொருவரே இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளார். குறித்த பெண் களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
தங்க நகைகள் கொள்வனவு
இவர் அளுத்கம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றில் சென்று தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 18,500 பவுண்டுகள் என அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
சுற்றுலா வழிகாட்டிகளாக பணிபுரியும் இருவர் தங்க ஆபரணங்களை எடுத்துச் சென்றதாக சுற்றுலாப் பெண் காவல்துறையினரிடம் மேலும் தெரிவித்தார்.
தங்கப் பொருட்களின் பெறுமதி இலங்கை நாணயத்தில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர விசாரணையில் காவல்துறை
முறைப்பாடு செய்தவர் இங்கிலாந்தின் சசெக்ஸ் மாகாணத்தில் வசிப்பவர் எனவும் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

