திலீபன் : வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாகம்
திலீபன் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாகம்.நாளாந்தம் தனது உயிரை அணு அணுவாக தனது மக்களுக்காக ஈகம் செய்த கொடையாளி.
உலகில் காந்தியம் என்றால் என்ன என்பதை பறைசாற்றிய போராளி.
ஆனால் திலீபன் 36 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் துயரம்
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இவையே திலீபன் முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகள் ஆகும்.
இந்த நிலையில் திலீபன் தியாக சாவடைந்து 36 வருடங்கள் கடந்த நிலையில் அவருடன் ஒன்றாக பழகியவர்கள் அந்த நினைவை மீட்கிறார்கள்
சகோதரனின் நினைவு
நான் இளங்கோ அண்ணாவை. தியாகி திலீபனுடன் மேடையில் பார்த்த பின்பு 36 வது ஆண்டில் பேசும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி். அவரிடம் உங்கள் தம்பியின் இளமைக்கால மறக்கமுடியாத நினைவுகளை எழுத்திலோ voice இலோ ஏதோவோரு வடிவத்தில் தாருங்கள் என்றேன் . என் நண்பர்கள். எல்லோரும் கூறும் பதிலே அவரிடமிருந்தும் வந்தது .
ராஜன் நான் எழுதுகின்ற உணர்வில் இல்லை அவனுடன் இளமை காலத்தில் பழகிய நாட்களை எண்ணக்கூடியது நான் இந்தியாவில் படித்தேன் நினைவில் உள்ளவற்றினை தருகிறேன் நீர் குறிப்பு எடுத்து எழுத சொன்னார். தொடர்ந்தும் கதைத்து சேகரிக்ககூடிய தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கின்றேன் எடுத்ததகவல்களை உங்களுடன் 36 வது ஆண்டில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
சுவீடனில் வசிக்கும் நண்பன் நிமலன் எழுதிய நினைவு குறிப்புபற்றி கூறியபோது இளங்கோ அண்ணா கூறினார் உரும்பிராய் சைவ தமிழ் பாடசாலையிலும், சிறிது காலம் அப்பாவிற்கு மாற்றம் கிடைத்து உரும்பிராய் சந்திரோதயம் பாடசாலையில் கல்வி கற்றதாகவும் என்ற மேலதிக தகவல் ஒன்றையும் தந்தார்.
இளங்கோ அண்ணா இந்தியா பயணம் தலைமன்னார் சென்று கடல் பயணம் செய்வதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து மாங்குளம் புகையிரத நிலையம் மட்டும் திலீபன் தன்னை வழியனுப்பிவைக்க வருவதாகவும் தானும் அவனும் நண்பர்கள் போல் பழகுவதாகவும் கூறினார்.
தங்கள் அம்மா பர்வதபத்தினி இரண்டு நாள் காய்ச்சலில் மரணமடைந்ததாகவும் , அந்த நாள் அன்று தாங்கள் பாடசாலையிலிருந்ததாகவும், அப்பாவின் நண்பர்கள் காரில் வந்து வீடு கூட்டிவந்த சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
பார்த்திபன் தனது ஆரம்ப கல்வியை உரும்பிராய் சைவ தமிழ் வித்யாலயத்தில் ஆரம்பித்தார். இராசையா மாஸ்டரும் அங்கு தான் பணி புரிந்தார். அவருடன் 1-5ம் வகுப்பு வரை கல்வி பயின்ற நிமலன் பாலசிங்கம் (இப்போது சுவீடனில் வசித்து வருகிறார்) தனது நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
பாடசாலையில் பேச்சு போட்டி
மாஸ்டரும் பார்த்திபனும் ஸ்கூட்டரில் பாடசாலை வருவதும் இன்றும் தன் கண்ணில் நிற்பதாக கூறினார். இருவரும் பலாலி வீதிக்கு நடந்து சென்று கறுவா வேண்டி சாப்பிடுவது வழக்கமாம். சில நாட்களில் அவரை பேருந்து ஏற்றி விட்டு தான் வீடு போவதாகவும் சொன்னார்.
பாடசாலையில் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டதும், சேர்ந்து தேவாரம் பாடியதையும் நினைவு கூர்ந்தார் நிமலன்.
சிறுவயதில் இருக்கும் சின்ன சின்ன சண்டைகள் தங்களுக்குள்ளும் வருமாம், உன்னை நான் வளர்ந்து அடிப்பேன் என்று கூறியவன், நாம் எல்லாம் எட்ட முடியாது இடத்துக்கு சென்று விட்டான் என்று கூறி மனம் கசிந்தார் நிமலன்.
தியாகி திலீபனின் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பன் ரவிராஜ் தியாகி திலீபனுடன் முதலாம் வகுப்பிலிருந்து யாழ் இந்து வரை கல்வி கற்ற நண்பன் நிமலன் உடன் உரையாடி ரவிராஜ் அவர்கள் எழுதி அனுப்பிய குறிப்பு.
பள்ளி தோழமையை மறக்காத
அவருடன் ஒன்றாக யாழ் இந்துவில் படித்த தயாநிதி (இப்போது பிரான்சில் வசித்து வருகிறார்), இன்னுமொரு விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். ஆனாலும் பார்த்திபன் தன் பள்ளி தோழமையை விடவில்லை. அந்த இரண்டு இயக்கங்களுக்கும் சண்டை ஆரம்பித்து விடுதலை புலிகள் பலரை கைது செய்த போது தன்னை அங்கு விசாரித்து தன் பாதுகாப்பை பார்த்திபன் உறுதி செய்து கொண்டதை நன்றியோடு நினைவு கூர்ந்தார் தாயநிதி.
பாடசாலையில் பார்த்திபன் ஒரு வித்தியாசனமானவனாகவே இருந்தான், எல்லோருக்கும் இருக்கும் வாலிப கோளாறு அவனை நெருங்கவில்லை. உயர்ந்த சிந்தனைகளில் அவன் கவனம் இருந்தது. சென் ஜோன்ஸ் அக்கடமியில் சில குழுக்கள் வந்து இடையூறு செய்தபோது, முன்னின்று மாணவர்களின் கல்வியை குழப்ப வேண்டாம் என்று அவர்களுடன் வாதிட்டு, அவர்களை வெளியில் பார்த்திபன் அனுப்பியதையும் தயாநிதி நினைவு கூர்ந்தார்.
