கிழக்கில் அரங்கேறிய இனவெறியாட்டம்: புலம்பெயர் அமைப்புகள் கண்டனம்
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊர்தி பவனி திருகோணமலையில் வைத்து தாக்கப்பட்டமைக்கு எதிராக பிரித்தானியாவில் செயல்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களான ஈழத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் குறித்த அமைப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் அமைதிப் போராட்டங்களுக்கும் நினைவு நிகழ்வுகளுக்கும் தடை ஏற்படுத்தக் கூடாது என ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவின் ஈழத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்களவர்கள் தாக்குதல்
எனினும், இதனை மீறி தியாக தீபம் திலிபனை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊர்தி பவனியின் மீது சில தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாதென பேரவை தெரிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காமை கவலையளிப்பதாகவும் அந்த பேரவை கூறியுள்ளது.
இந்த நிலையில், ஈழத் தழிழர்கள் இறைமையுடன் கூடிய தன்னாட்சியைப் பெற்றுக் கொள்வதற்கும் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய ஜனநாயக ரீதியில் வாழ்வதற்குமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு ஏற்படுத்த வேண்டும் என பிரித்தானியாவின் ஈழத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மீது சில சிங்களவர்கள் தாக்குதல்களை முன்னெடுக்கும் போது காவல்துறையினர் அமைதி காத்தமை தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், இலங்கையின் மனித உரிமைகள் மேலும் மோசமடையுமென அந்த பேரவை குறிப்பிட்டுள்ளது.