மற்றுமொரு இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலேயே ஊர்திப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது: தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டு
இலங்கையில் மற்றுமொரு இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் தியாகி திலீபனின் திருவுருவ படம் தாங்கிய ஊர்திப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள தாம் விரும்புவதாக இன்று நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்யும் வகையில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
நினைவூர்த்திப்பயணம்
விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினராக திலீபன் இருந்தாலும், மிகவும் அகிம்சையான முறையில் அவரது வாழ்வை அவர் முடித்துக் கொண்டிருந்தார்.
எனினும், அவரை நினைவுகூறும் வகையில் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நினைவூர்த்திப்பயணம் சிங்கள மக்கள் அதிகளவில் வசிக்கும் இடமான தம்பலகாமம் ஊடாக திருகோணமலையை சென்றடைந்திருந்தது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தம்பலகாமம் பகுதியை சேர்ந்த பல சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், திலீபனின் ஊர்திப்பயணம் குறித்த பகுதியை தண்டி செல்வது அவர்களுக்கு மனக்கவலையை ஏற்படுத்தும். இது ஒரு பொதுவான விடயம். இதனாலேயே, தம்பலகாமம் பகுதியினூடாக திலீபனின் ஊர்திப்பயணம் செல்லும் போது பிரச்சனை ஏற்பட்டது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு
இந்த தாக்குதல் நடத்தப்பட்டதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தாக்கப்பட்டுள்ளதையும் ஏற்றுக் கெள்ள முடியாது.
இந்த ஊர்திப்பவணிக்கான அனுமதியை காவல்துறையினரும் வழங்கியிருந்தனர். எனவே, இதன் குற்றவாளிகளாக காவல்துறையினரும் இருக்கிறார்கள்.
நான் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் விதத்திலும் சிங்கள மக்களை ஆதரவளிக்கும் வகையிலும் பேசவில்லை. சிங்கள மக்களின் கோபத்தை தூண்டும் வகையில் குறித்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமத்தை தவிர்த்து வேறு வழியில் குறித்த ஊர்திப்பவணி திருகோணமலையை சென்றடைந்திருக்கலாம். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்றார்