கஜேந்திரனை கைதுசெய்க: சிறிலங்காவில் போர்க் கொடி
திருகோணமலையில் தியாகி திலீபனின் நினைவூர்த்தி பேரணியை முன்னெடுத்தமை தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை கைதுசெய்ய வேண்டும் என கடும்போக்குவாத சிங்கள அமைப்பான பிவித்தூறு ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிவித்தூறு ஹெல உறுமயவின் பிரசார செயலாளர் அஞ்சன உதார தலைமையிலான குழுவினர் இன்று கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அஞ்சன உதார மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாம், பயங்கரவாதத்தை ஊக்குவித்த, பிரிவினைவாதத்தை தூண்டிய செல்வராசா கஜேந்திரன் என்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
அரசியலமைப்பின் 157 ஆவது சரத்
நேற்றுமுன்தினம் மிலேச்சைதனமான பயங்கரவாத அமைப்பு மற்றும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவரான திலீபனின் நினைவுகூருவதற்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வர்ணங்களக்கு சமமான கொடிகளுடன் ஊர்தியில் கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பேரணி சென்றுள்ளார்.
இதன்ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பாரதூரமான இரண்டு தவறுகளை செய்துள்ளார். அரசியலமைப்பின் 157 ஆவது சரத்தின் பிரகாரம், பிரிவினைவாதத்தை ஊக்குவித்துள்ளதுடன், அதனை தூண்டியுள்ளார்.
அதேபோன்று குடிசார் உரிமைகள் சட்டத்தின் கீழ் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றுள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் மேற்கொண்ட மிலேச்சைதனமான கொலைகளால், அதிக வேதனைகளுக்கு கிழக்கிலுள்ள சிங்கள மக்களே உள்ளாகியுள்ளனர்.
இனங்களுக்கு இடையில் அமைதியின்மை
சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசம் ஊடாக திலீபன் என்னும் பயங்கரவாத தலைவரை நினைவுகூர்ந்து நினைவு ஊர்தி பேரணி சென்றதன் ஊடாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் அமைதியின்மை, முரண்பாடு, ஏற்பட முடியும். இந்த இரண்டு தவறையும் செல்வராசா கஜேந்திரன் செய்துள்ளார்.
ஆகவே இதன் அடிப்படையில் அவரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள், அமைதியின்மை ஏற்பட வேண்டிய தேவையில்லை.
அனைத்து இன மக்களும் சமாதானத்துடன் வாழ வேண்டும். இந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொள்ளும் செயற்பாடுகள் ஊடாக இந்த நாட்டில் முரண்பாடு, அமைதியின்மை ஏற்பட முடியும். இந்த நினைவூர்த்தி செல்லும் போது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இவ்வ்வாறான தாக்குதல்களை நாம் அனுமதிக்க மாட்டோம்.
எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு காரணமான ஏற்படுத்தியவரான செல்வராசா கஜேந்திரன் தொடர்பாக இதுவரை எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் ஊடாக செல்வராசா கஜேந்திரனுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள், விசேடமானவர்கள் அல்ல.நாட்டின் சாதாரண சட்டம் அவர்களுக்கும் பொருந்தும். அந்த சாதாரண சட்டத்தை மீறிய, அரசியலமைப்பை மீறிய ஐ.சி.சி.பீ.ஆர் சட்டத்தை மீறிய செல்வராசா கஜேந்திரனை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம்” என்றார்.