“தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை” : யாழ். நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் செயற்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு கட்டளை ஒன்றை அனுப்பியுள்ளது.
இக்கட்டளையில் தங்களால் மேற்கொள்ளப்படும் நினைவு ஊர்திப் பவனியினை(பேரணியினை) தடை செய்யுமாறு யாழ்ப்பாணம் காவல்துறையினர் இன்றைய தினம்(19) வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ அல்லது சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நாளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டளை
எனவே, தங்கள் தரப்பு வாதத்தினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ மேற்கொள்ள நாளைய தினம் முற்பகல் 09.30 மணிக்கு மன்றில் தோன்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த ஊர்தி மீது திருகோணமலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வவுனியாவை ஊர்தி வந்தடைந்திருந்தது.
சேதமாக்கப்பட்ட ஊர்தியுடன் புதிய ஊர்தி
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சேதமாக்கப்பட்ட ஊர்தியுடன் புதிய ஊர்தி தயாரிக்கப்பட்டு மாங்குளத்திலிருந்து கிளிநொச்சி வரை ஊர்தி பயணித்திருந்தது.
இந்த நிலையில் இன்று(19) தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பவனி வட்டக்கட்சி, கிளிநொச்சி பொதுச் சந்தை, செல்வா நகர், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஊடாக ஜெயந்தி நகர் சென்று மீண்டும் கிளிநொச்சியை வந்தடைந்தது.
அத்துடன் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் ஊடாக புதுக்குடியிருப்புக்கு சென்று அங்கிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற ஊர்தி முள்ளிவாய்க்கால் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டததை தொடர்ந்து கொக்குளாய் கொக்குத் தொடுவாய் ஊடாக முல்லைத்தீவு நகரை சென்றடைந்தது.
இதன்போது பெரும்பாலான மக்கள் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.