தியாக தீபம் திலீபனை வைத்து கட்சி அரசியல் : சிவஞானம் விசனம்
“தியாக தீபம் திலீபனை கொண்டு சென்று , திலீபனுக்கு சிங்கள மக்களால் அடிவாங்கி கொடுத்துள்ளார்கள். இது ஒரு போதிய முன் யோசனை இல்லாமல் செய்த செயலால் நடைபெற்றது” என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் சகல பிரதேசங்களிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் திலீபனின் படத்தை ஊர் ஊராக கொண்டு சென்று அஞ்சலி செலுத்த வேண்டிய தேவையில்லை.
பேரெழுச்சி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி சக கட்சிகளின் ஒன்றிணைவோடு , பேரெழுச்சியாக நடைபெற்றது.
அதனால் அதனை குழப்ப வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வந்திருக்காது.மக்களின் எழுச்சியை பார்த்து குழப்பும் சிந்தனைகளோடு இருந்தவர்கள் கூட தமது சிந்தனையை கைவிட்டு இருப்பார்கள் ஆனால் தியாக தீபம் திலீபனின் உருவ படம் தாங்கி வந்த வாகனத்தில் இருவர் மட்டுமே இருந்தனர்.
அதில் ஓருவர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், இவர்கள் தமது கட்சி அரசிலுக்காக தமது கட்சியை வளர்க்க இதனை செய்தனர் என்றே நினைக்கின்றேன். அங்கு தாக்குதல் நடத்திய பெண்மணி உள்ளிட்டவர்கள் முதலில் திலீபனின் படத்திற்கே தாக்குதல் மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
அவர்கள் திலீபனை இலக்கு வைத்தே தாக்கினர். இவர்களும் திலீபனை கொண்டு சென்று அவர்களிடம் அடிவாங்க வைத்துள்ளனர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கஜேந்திரன் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனை வன்மையாக நானா கண்டிக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.