தியாக தீபத்தின் ஆவண காட்சியகத்தை குழப்பும் சைக்கிள் அணி! அம்பலப்படுத்திய மணிவண்ணன் தரப்பு
தியாகதீபம் திலீபனுடைய ஆவணக் காட்சி இடத்தையும் மாவீரர் நாள் நினைவேந்தலையும் நடத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்ற இடத்தினை வழங்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒத்துழைக்க வேண்டும் என யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (14.09.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தியாகதீபம் திலீபன் அண்ணாவினுடைய நினைவேந்தல் அவர் உண்ணாவிரதம் இருந்த நாளான நாளையதினம் தொடங்குகின்றது.
மாவீரர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
இந்த நிலையில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம், தியாக தீபம் திலீபன் அண்ணாவினுடைய வாழ்க்கை வரலாற்றையும் அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களிலே அவர் அனுபவித்த வேதனைகளையும் அவருடைய தளராத உறுதியையும் ஆவணப்படுத்தி ஒரு ஆவண காட்சியகமாக 2023 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக நல்லூரில் திலீபன் அண்ணாவுடைய பிரதான தூபி அமைந்திருக்கின்ற பகுதியில் அதாவது யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியிலே உரிய நடைமுறைகளுடன் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வந்திருந்தோம்.
இந்த நிலையிலே இந்த வருடமும் ஆவண காட்சியகத்தை மீண்டும் செய்வதற்கு நாங்கள் முயற்சித்த பொழுது ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறித்த இடத்தினை முன் பதிவு செய்துவிட்டது என்ற காரணத்தினால் எங்களுக்கான அனுமதிகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.
நாங்கள் தொடர்ச்சியாகவே அந்த இடத்திலே அந்த ஆவண காட்சியகத்தை செய்து வருகின்றோம். இந்த நிலையிலே அந்த நிகழ்வை குழப்பும் வகையிலே அல்லது அந்த நிகழ்வை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையிலே இந்த செயற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன.
நாங்கள் 2019 ஆம் ஆண்டிலிருந்து அதே இடத்திலேயே மாவீரர் நாள் நிகழ்வுகளையும் செய்து வருகின்றோம். 25,000ற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை நாங்கள் அந்த இடத்திலே வைத்திருந்தோம்.
2019 ஆம் ஆண்டு நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலே இருந்த பொழுது, குறித்த கல்வெட்டுகளை வைத்து அந்த நிகழ்வினை முதன்முதலாக ஆரம்பித்த பொழுது எங்களுடைய கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் வந்தது.
மக்கள் வருவதை தடை
எங்களுடைய கட்சி தலைமை எனக்கு நேரடியாகவும் என்னுடைய சக மாநகர சபை உறுப்பினர்களாக இருந்த சிலருக்கும் நேரடியாகவே சொல்லி இருந்தார்கள்.
அந்த இடத்திலே அவ்வாறான நிகழ்வுகளை செய்யக்கூடாது என்றும் நாங்கள் கோப்பாயிலே இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மக்கள் வருவதை தடை செய்கின்றோம் அல்லது அவர்களை வர முடியாமல் இங்கே நாங்கள் திசை திருப்புகின்றோம் என்ற நிலையிலே எங்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
இருந்த பொழுதும் நாங்கள் பின் நாளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து விலகிய பிற்பாடு 2022 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அந்த இடத்திலே மாவீரர் நாள் நிகழ்வுகளையும் நாங்கள் செய்து வருகின்றோம். தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் தங்களுடைய மாவீரர் செல்வங்களுடைய பெயர் தாங்கிய கல்வெட்டுகளுக்கு முன்னால் சுடரேற்றி ஒரு உணர்வு பூர்வமாக வழிபட்டு சென்ற கடந்த காலங்கள் இருக்கின்றன.
அந்த வகையிலே அந்த இரண்டு நிகழ்வுகளையும் இந்த முறை தாங்கள் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே முன் பதிவு செய்திருக்கின்றார்கள். உண்மையில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான அந்த காணியிலே யாரும் முன்பதிவு செய்யலாம்.
அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒரு அறம் ஒன்று இருக்க வேண்டும். அந்த அறத்தின் படி அவர்கள் செய்யவில்லை என்பதை எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கையாகவும், ஏனென்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவீரர் நாளை கோப்பாயிலே வருடா வருடம் செய்து வருகின்றார்கள்.
அறம் இல்லாத செயல்பாடு
அவர்கள் கோப்பாயிலே வருட வருடம் செய்கின்ற அந்த இடத்திலே நாங்கள் சென்று அதனை முன் பதிவு செய்து அல்லது அந்த காணியை எடுத்து மாவீரர் நாளை நாங்கள் செய்ய போகின்றோம் என்று சொல்வது எவ்வாறு ஒரு அறம் இல்லாத செயல்பாடோ அதேபோல் கிட்டுப் பூங்காவிலேயே மாவீரர் வாரத்தில் ஆசிரியர் பொ.ஐங்கரநேசன் செய்யும் கார்த்திகை பூ கண்காட்சியும் ஒவ்வொரு வருடம் நடைபெற்று வருகிறது.
அதுவும் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான பகுதியே. குறித்த நிகழ்வை குழப்பும் வகையிலே நாங்கள் அதை அவருக்கு முன்னால் முன்பதிவு செய்து அந்த இடத்திலே நாங்கள் வேறு நிகழ்வுகளை நடத்தலாம். ஆனால் அதுவும் ஒரு அறம் இல்லாத செயல்பாடு.
அந்த வகையிலே இவ்வாறாக ஒவ்வொரு தரப்புக்களும் ஒவ்வொரு இடத்திலே மக்களை பேரெழுச்சி கொள்கின்ற நிகழ்வுகளை செய்கின்ற பொழுது எல்லா இடங்களையும் கைப்பற்ற வேண்டும். நாங்களே செய்ய வேண்டும் என்கின்ற அந்த எண்ணக்கருவின் கீழ் இவ்வாறு செயல்படுவது உண்மையிலே ஒரு அறமற்ற செயற்பாடாகும்.
உண்மையில் இந்த செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என்று கூறி அல்லது இந்த செயற்பாட்டை விலக்கிக் கொண்டு எங்களுக்கு வழமை போல் கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றது போல் எங்களுக்கு அந்த காணியை வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு நாங்கள் கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை வழங்கி இருந்தோம்.
அந்த கோரிக்கை கடிதத்தை நேரடியாக அவரது அலுவலகத்துக்கும் அதே நேரத்தில் பதிவுத்தபாலிலும் நாங்கள் வழங்கி இருந்தோம். ஆனால் இன்று வரைக்கும் எந்த ஒரு பதிலும் எங்களுக்கு தரவில்லை. இன்றைக்கு அந்த நிகழ்வுகளை குழப்புகின்ற வகையிலே நடைபெறுகின்ற இந்த செயற்பாடுகளை நிறுத்தி அந்த நிகழ்வுகளை நாங்கள் ஒற்றுமையாக செய்கின்ற வகையில் எங்களுக்கு அந்த நிகழ்வை தொடர்ச்சியாக செய்ய நீங்கள் வழி சமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்த இடத்திலே நாங்கள் விடுக்கின்றோம்.
அதே நேரத்தில் உண்மையில் எங்களுடைய மக்கள் பேரெழுச்சி கொள்ள வேண்டும், எங்களுடைய இலக்கை நோக்கி நாங்கள் நகர்த்த வேண்டும் என்று சொன்னால் எங்களுக்குள்ளே இருக்கின்ற இந்த பாகுபாடுகளை களைந்து விட்டு அந்த அந்த இடங்களை அவரவர் பாட்டுக்கு அந்த மக்களை எழுச்சி கொல்லுகின்ற செயற்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
அந்த வகையிலே இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தியாகதீபம் திலீபன் அண்ணாவுடைய ஆவணக் காட்சி இடத்தையும் அதே நேரம் மாவீரர் நினைவேந்தலையும் நடத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்ற அந்த இடத்தினை வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்துக்கு நாங்கள் கோரிக்கை விடுகின்றோம்“ என யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
