சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டிறைச்சியுடன் மூவர் கைது
முல்லைத்தீவில் (Mullaitivu) சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டிறைச்சியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோதமாக மாடு ஒன்று வெட்டப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட இறைச்சி
கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
இதையடுத்து, வள்ளிபுனம் பகுதி சுகாதார பரிசோதகர் றொஜிசன் மற்றும் விசுவமடு பகுதி சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் ஆகியோர் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட இறைச்சிகளை கைப்பற்றி மண்ணெண்ணை ஊற்றி தாட்டு அழித்த அதேவேளை மூவரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களவாடப்பட்ட இறைச்சி
குறித்த மாடு களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த வள்ளிபுனம் தேவிபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட மாடுகள் களவாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
