பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மூவர் கோரப்பலி
பிரித்தானியாவில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில் ஈழத்தமிழர்கள் மூவர் பலியாகிய துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து ஏ285 வீதியில் மேற்கு சசெக்ஸின் சிசெஸ்டருக்கு அருகிலுள்ள டன்க்ரன் என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஈழத்தமிழர் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் இருவர் பெண்கள் எனவும் ஒருவர் ஆண் எனவும் தெரியவருகிறது.
உறவினரின் திருமண நிகழ்வு ஒன்றுக்காக கனடாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகை தந்திருந்த இருவர் உட்பட மூவர் இந்த விபத்தில் அந்த இடத்திலேயே பலியாகிய சோகம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை அழைப்பு
குறித்த வாகனத்தில் பயணித்த இன்னொருவர் படுகாயமடைந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த சனியன்று முன்னிரவு வேளையில் இவர்கள் அனைவரும் பயணித்த பி.எம்.டபிள்யூரக வாகனம் இன்னொரு மெர்சடிஸ் ரக வானத்துடன் மோதியதால் இந்தக்கோர விபத்து ஏற்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
அத்துடன், ஈழத்தமிழர் குடும்பத்தினர் பயணித்த வாகனமே மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, இரண்டாவது வாகனத்தில் பயணித்த மூன்றுபேர் படுகாயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்கான துல்லியமான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என்பதால் இந்த விபத்துக் குறித்த சாட்சிகள் மற்றும் அந்தவழியால் சென்ற ஏனைய வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காட்சிப் பதிவு கருவிகளில் இதுதொடர்பான பதிவுக் காட்சிகள் ஏதாவது இருந்தால் அவற்றை தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.




