கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
குடாவெல்ல கடற்கரையில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மாத்தறை, கம்புறுப்பிட்டிய பிரதேசத்தில் தொழில்புரியும் மூவரும் குடுவெல்ல ஹும்மான ஊதுகுழலியை பார்வையிட வந்த நிலையில் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இளைஞர்கள் மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் உயிரிழப்பு
இச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய இரு இளைஞர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தேடும் பணிகள்
சம்பவத்தில் உயிரிழந்தவர் வெலிமடை பொரகஸ் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கடலில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.