சிறுத்தையை காப்பாற்ற சென்ற மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை
திஸ்ஸமஹாராம ரன்மினிதென்ன வனப்பகுதியில் வலையில் சிக்கிய சிறுத்தையை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வனவிலங்கு மருத்துவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யால பூங்காவிற்கு அருகில் சிறுத்தை ஒன்று பொறியில் சிக்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஊவா மாகாண வனவிலங்கு மருத்துவர் டபிள்யூ.தர்மகீர்த்தி தலைமையிலான குழுவினர் இன்று காலை ரொட்டவெவ பகுதிக்கு வந்து சிறுத்தையை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மருத்துவரை பதம் பார்த்த சிறுத்தை
அவ்வேளை பொறியை உடைத்த சிறுத்தை, வனவிலங்கு மருத்துவர் மாலக அபேவர்தனவின் உடலில் பாய்ந்து அவரது வலது கையின் முழங்கை பகுதியை கடித்துள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள் கூச்சலிட்டதையடுத்து சிறுத்தை காட்டுக்குள் தப்பிச் சென்றது.
சிறுத்தையின் தாக்குதலால் காயமடைந்த வனவிலங்கு மருத்துவர் உடனடியாக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வனவிலங்கு மருத்துவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
