லண்டனில் ரில்வின் சில்வா : எதிர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு
சிறிலங்கா ஆட்சித்தரப்பான தேசிய மக்கள் சக்தியின் முதுகெலும்பாக கருதப்படும் ஜே.வி.பி அமைப்பின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) லண்டனில் பங்கெடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ள இடத்தில் ஒரு எதிர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
பிரித்தானியாவில் தங்கியுள்ள ரில்வின் சில்வா இன்று (23) பிற்பகல் 2 மணியளவில் லண்டன் அல்பேட் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் புலம்பெயர் இலங்கையர்களுடன் ஒரு நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த எதிர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருமலை புத்தர் சிலை சம்பவம்
கடந்த மாத இறுதியில் இதே பாடசாலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள், ஈழத்தமிழர்கள் உட்பட்ட புலம்பெயர் இலங்கையர்களுடன் ஒரு நிகழ்வை நடத்திச்சென்ற நிலையில் திருமலை புத்தர் சிலை சம்பவத்தில் அநுரவின் தேசிய மக்கள் சக்தி பௌத்த கடும் போக்குவாதிகளுக்கு அடிபணிந்திருந்தது.

இந்த நிலையில் அடிப்படையில் தமிழர் விரோத போக்கு மற்றும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு துணைபோன ஜேவிபிக்கு இந்த எதிர்ப்பு காட்டப்படுவதாக போராட்ட ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கனடாவின் பிரெம்டன் நகரில் தமிழீழ தேசியக்கொடிநாள் கடைப்பிடிக்கபட்ட நிலையிலும் எதிர்வரும் 27ஆம் திகதி புலம்பெயர்நாடுகளில் மாவீரர் தினம் நடக்கவுள்ள நிலையிலும் சிறிலங்காவில் ஆட்சித்தரப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரதான தரப்பாக உள்ள ஜேவிபி பொதுச்செயலாளருக்கு எதிரான இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |