தனியார் பேருந்து உரிமையாளர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த எச்சரிக்கையை தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் விடுத்துள்ளது.
ஊடகத்திற்கு நேற்று (23) கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
குழறுபடிகள்
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண சபை எல்லைக்குள் கல்முனை திருகோணமலை, அம்பாறை திருகோணமலை மற்றும் அக்கரைப்பற்று திருகோணமலை குறித்த மூன்று வீதிகளில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியன இருசாராரும் ஒருங்கிணைந்த நேர அட்டவணை தயாரித்து அதன் பிரகாரம் கடந்த 13 வருடங்களாக சேவையில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த வீதியில் பேருந்துகளுக்கு மத்தியில் எதுவிதமான போட்டி தன்மையோ மற்றும் விபத்துக்களோ, குழறுபடிகள் குழப்பங்களே இல்லை இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இந்த ஒருங்கிணைந்த நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து வண்டி உரிமையாளர்களுடைய எதுவித வேண்டுதலும் இன்றி இந்த நேரங்களை சீர் குழப்புவதற்கு எடுக்கும் முயற்சி அனைத்து பேருந்து உரிமையாளர்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு இந்த இந்த நேர அட்டவணை மாற்றுவதன் ஊடாக அரசாங்கத்துக்கு, அதிகாரசபைக்கு அல்லது பயணிக்கும் பயணிக்கு எதுவிதமான நன்மைகளும் இல்லை, அவ்வாறு நன்மைகள் இருக்குமாக இருந்தால் அது சம்பந்தமாக பேருந்து உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்க முடியும்.
நேர அட்டவணை
இவ்வாறு எதுவித நன்மையும் இல்லை என இருந்தும் எதற்கு இந்த மூன்று அதிகாரிகளும் இந்த நேர அட்டவணையை சீர் குலைப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்ற விடயத்தை ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
வருகின்ற 25 ஆம் திகதி ஒருங்கிணைந்த நேர அட்டவணைக்கு புறம்பான சுழற்சிமுறை நேர அட்டவணை சம்பந்தமாக கலந்துரையாடி அது சம்பந்தமாக அறிவுறுத்துவதற்கு ஒரு கூட்டத்தை அதிகார சபையின் தலைவர் தயார்படுத்தியுள்ளார்.

எனவே இந்த சுழற்சிமுறை நேர அட்டவணையை உடனே நிறுத்தி வழமைபோல ஒருங்கிணைந்த நேர அட்டவணைப்படி சேவையில் ஈடுபட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதேவேளை இந்த அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகிய மூன்று பேரும் சுழற்சி முறை அட்டவணை என்ற செயற்பாட்டை நிறுத்தாவிட்டால் நாங்கள் அனைவரும் எதிர்வரும் 25ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்திற்கு முன்னால் தனியார் போக்குவரத்து பேருந்து வண்டிகளை நிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |