தமிழர்கள் பிரிந்து தனியாகச் செல்லவேண்டிய காலம் உருவாகிவிட்டது - சிவமோகன்
இந்த நாடு முன்னேறுவதற்குரிய எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இப்படிப்பட்ட சிங்கள அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து வாழக்கூடிய நிலை இல்லை.
தமிழர்களை பொறுத்தமட்டில் பிரிந்து தனியாகச் செல்லவேண்டிய காலம் இயற்கையாகவே உருவாகி விட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.
இன்று புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து மாட்டு வண்டியில் நோயாளர் ஒருவரை ஏற்றியவாறு அவருக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் சிகிச்சை அளித்தவாறும், நோயாள் காவு வண்டி ஒன்றினை கயிற்றில் கட்டி கட்சி ஆதரவாளர்கள் அதனை இழுத்தவாறும் துவிச்சக்கர வண்டிகளுடனும் ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி புதுக்குடியிருப்பு நகர்பகுதி ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்றது.
மாட்டு வண்டியில் நோயாளர் ஒருவரை ஏற்றியவாறு சிகிச்சை
தற்போது நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்கள் வரையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு முச்சக்கரவண்டிகளுக்கோ, அல்லது மோட்டார் சைக்கிள்களுக்கோ எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், உடனடியாக எரிபொருள் பிரச்சினைக்கு தீர்பவு பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த போதே சிவமோகன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்கள் கூட உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி உயிரிழப்புக்கள் நிகழ்ந்தாலும் அதற்கு பதில் சொல்வதற்கு கூட எவரும் இல்லை.
தற்போது உள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நோயாளர்காவு வண்டிகள் உரிய சேவையினை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரே தெரிவு மாட்டு வண்டி தான்
இவ்வறான நிலையில் அவர்கள் வீடுகளில் வந்து ஆபத்தான நோயாளர்களை ஏற்றுகிறார்கள். இல்லை எனில் மக்களுக்கு உள்ள அடுத்த தெரிவு முச்சக்கர வண்டி. முச்சக்கர வண்டிகளும் தற்போது எரிபொருள் இல்லாத நிலையில் அல்லது மோட்டார் சைக்கிளில் செல்வதாக இருந்தால் அதற்கும் பெற்றோல் இல்லை. இவ்வாறான நிலையில் ஒரே தெரிவு மாட்டு வண்டி தான்.
ஆகவே இந்தப் பிரச்சினையினை வெளியில் கொண்டு வர வேண்டிய தேவை எமக்கு உள்ளது. நாங்களும் வெளிக் கொண்டு வரவில்லை எனில் நாங்களும் அவர்களுக்கு துணை போனதாகவே இருக்கும். எங்களை பொறுத்தளவில் இந்த முட்டாள்தனமான அரசாங்கத்தை நாங்கள் நம்பவில்லை. அதனால் தான் நாங்கள் எங்களுக்கு தனி ஈழம் கோரி போராட்டத்திற்கு சென்றதே.
இவர்களுடன் ஒருகாலமும் எங்களுடைய பயணம் முடியப்போவதில்லை என்பது தான். இப்போது அதனை உறுதிப்படுத்திவிட்டார்கள்.
வடகிழக்கு மாகாணத்தினை தனியாக தமிழர்களிடம் ஒப்படைக்கப்படுமாக இருந்தால்
எங்களை பொறுத்தமட்டில் வடகிழக்கு மாகாணத்தினை தனியாக தமிழர்களிடம் ஒப்படைக்கப்படுமாக இருந்தால் எரிபொருள் அல்ல சகலதும் கொண்டுவரக்கூடிய அபிவிருத்தியினை முன்னெடுக்கக்கூடிய நிலைப்பாடு எங்களிடம் உள்ளது.
ஆனால் எங்களிடம் 300 இற்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்துள்ளது. தடைப்பட்டியலில் 400 பெயரின் பெயர்கள் போடப்பட்டுள்ளது. இவ்வளவும் வளமானவை. இன்று டொலரினை கேட்டு கெஞ்சுகின்றார்கள்.
மக்களை பொறுத்தமட்டில் தற்போது விவசாயம் கடற்தொழில் உள்ளிட்ட நாளாந்த தொழில் நடவடிக்கைக்கு எரிபொருளினை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கான தீர்வினை உரியவர்கள் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
