அதிபர் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கவும், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வரவும் அதிபர் ரணிலால் முடிந்தது. எனவே எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த நாம் அனைவரும் ஆதரவு வழங்குகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
இதேவேளை போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என டிரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
யுக்திய நடவடிக்கை
“நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குதல் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் எம்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த செயற்பாட்டைச் சீர்குலைக்க பல்வேறு நபர்களும் குழுக்களும் முயற்சித்து வருகின்றனர். போதைப்பொருள் வலையமைப்பு மூலம் பணம் பெறுபவர்கள் அந்தக் குழுக்களுக்கு பணத்தை செலவிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபாவாகும். காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டிடங்களின் பெறுமதி 725 மில்லியன் ரூபா. அதற்காக செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 58,562. அந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,234 ஆகும்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு (E Passport) சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம்.
கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக மீண்டும் வரிசைகள் அதிகரித்துள்ளன. அந்தப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கொரிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்வில் சித்தி பெறுபவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளோம்.
புதிய அடையாள அட்டையை ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
நாட்டை மீட்டெடுத்த ரணில்
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடாக, போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக பாடசாலைகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அத்துடன் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த நாம் அனைவரும் ஆதரவு வழங்குகிறோம்.
இந்த நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கவும், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வரவும் அதிபரால் முடிந்தது.
நிலைமையை புரிந்து கொண்டவர்கள் வேறொரு அதிபரைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்பதே எமது கருத்தாகும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |