கூட்டமைப்பின் இராஜதந்திரம் செல்லாக் காசானதா..!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், அடுத்த தீபாவளிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறி, இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.
எனினும் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் இன்றுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இராஜதந்திர முயற்சிகளின் தோல்வி
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளின் தோல்வியே தமிழ் மக்கள் இன்று செல்லா காசாகியுள்ளமைக்கு காரணம் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
அதற்கு சாட்சியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட தீபாவளி தின வாழ்த்துச் செய்தி அமைந்துள்ள அதேவேளை, அந்த அறிக்கையிலுள்ள விடயங்கள், தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நன்மதிப்பை குறைக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
90 வயதை கடந்துள்ள இரா.சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான தீபாவளி தினச் செய்தியில், இனப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைந்து தீர்வை வழங்காத பட்சத்தில் சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்குவோம் எனக் கூறியுள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தீர்வு
அடுத்த வருடத்திற்குள் தீர்வை வழங்குவதாக ரணில் விக்ரசிங்க கடந்த வருடம் கூறியிருந்த போதிலும் தீர்வு விடயத்தில் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ள இரா.சம்பந்தன், தற்போதும் அவர்கள் பேரினவாத அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தமிழ் மக்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான கருமங்களை முன்னெடுக்கப்பட தாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதையும் கூறிவைக்க விரும்புவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதனூடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.
சம்பந்தனின் அறிக்கை
இந்த நிலையில் இரா.சம்பந்தனின் இன்றைய தீபாவளி தின அறிக்கையானது தமிழ் தேசியப் பரப்பில் உள்ளவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இரா.சம்பந்தனின் இன்றைய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஏளனமாக விமர்சித்துள்ளார்.
” தீபாவளித் தீர்வைக் காணவில்லை என்றீர்கள்.இதோ வந்து விட்டது. தீர்வு கிடைக்காதுவிடின் சர்வதேசத்தின் உதவியுடன் களம் காணப்போகிறாராம்“ என செல்வராசா கஜேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் இரா.சம்பந்தன் இன்றைய தீபத் திருநாளில் வெளியிட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற அவருக்கு உறுதுணையாக யார் இருப்பார்கள் என்ற கேள்வியும் காணப்படுகின்றது.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த அனைத்து பங்காளிக் கட்சிகளும் அதில் இருந்து விலகியுள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் தனித்துவிடப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் பிரிந்து சென்றுவிட்டார்கள் என்றாலும் கூட இலங்கை தமிழரசு கட்சிக்குள் ஒன்றுமை உள்ளதா என்ற விடயமும் சந்தி சிரிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படையாக கூறியுள்ளமை குறித்து தனது மன வேதனையை மாவை சேனாதிராஜாவிடம் இரா.சம்பந்தன் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதி என நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கூறிய இரா.சம்பந்தனை பின்பற்றி நாடாளுமன்றம் சென்ற சுமந்திரனும் விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தன்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாரில்லாத ஒருவராகவே வலம் வருகின்றார்.
தலைமைத்துவ போட்டி
அத்துடன் இரா.சம்பந்தனின் வயோதிபத்தை பயன்படுத்தி, இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றும் முயற்சியாகவே எம்.ஏ.சுமந்திரன், அவரை பதவி விலக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதன் அடிப்படையில் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு இடையிலான பிணைப்பும் முறிந்துள்ள நிலையில், இலங்கை தமிழரசு கட்சியிலுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் எதிர்ப்பாளர்களாகவும் ரணில் ஆதரவாளர்களாகவும் எந்தப் பக்கம் செல்வதென்று தெரியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
மொழியாலும் தொழில் நிபுணத்துவத்தாலும் கட்சியிலும் நாடாளுமன்றத்திலும் ஆதிக்கம் செலுத்தும் எம்.ஏ.சுமந்திரன், உயர்மட்டத்தினருக்கு நெருக்கமானவராக இருக்கின்றாரே தவிர மக்களுக்கு நெருக்கமான அரசியல்வாதியாக இல்லை என்ற விமர்சனங்களும் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணிக்கும் நிலையில், இரா.சம்பந்தன் கூறுவதை போன்று சர்வதேசத்தின் ஆதரவுடன் அரசியல் தீர்வை பெறுவோம் என கூறும் கருத்து சிறு பிள்ளைக்குரிய சிரிப்பு வரவைக்கும் வகையிலேயே இருப்பதாக துறைசார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.