ஆட்சியாளர்களின் மனநிலையால் கேவலமடைந்த இலங்கை : சொர்க்கபுரியாக மாற்றும் திறன் தமிழர்களிடமாம்
சிறிலங்கா ஆட்சியாளர்களின் மனநிலை காரணமாகவே ஆசியாவிலேயே கேவலமடைந்த நாடாக இலங்கை மாறியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஒரு சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட வரலாறுகளே காணப்படுவதாக விமர்சித்துள்ளார்.
ஆட்சியாளர்களின் மனநிலை
அவர் மேலும் கூறுயைில், ஆசியாவிலேயே மிகக்கேவலமான ஒரு நாடாக இலங்கை மாறியிருக்கிறது. இதற்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்களுடைய மனநிலை தான் காரணம்.
ஒரு காலத்தில் சிங்கப்பூர் போன்று இலங்கை வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், இன்று சிங்கப்பூரானது உலகத்திலேயே முன்னேறிய நாடாக எங்கேயோ சென்று விட்டது.
ஆனால் இங்கே நாங்கள் வாழ முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். காரணம் என்னவென்றால் இந்த நாட்டினுடைய ஆட்சியாளர்களின் மனப்பாங்குதான் அதற்கான காரணம்.
தமிழர்களிடம் இருக்கும் ஆற்றல்
ஒன்று, சக இனத்தவர்களை அவர்கள் வாழ விடத் தயாராக இல்லை.
ஏனையவர்களை அழித்து இந்தத் தீவை சிங்கள பௌத்த தீவாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மறுபுறத்திலே தாங்கள் ஆட்சியில் இருந்து கொண்டு கொள்ளையடித்து நாட்டை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இவர்களால் இந்த நாட்டை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது.
எங்களுடைய தேசம் அதிகரிக்கப்படுமாக இருந்தால், இந்த ஒற்றையாட்சியை கடந்து தமிழ் தேசம், இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அரசியல் தீர்வை நாங்கள் எட்ட முடியுமாக இருந்தால், இந்தத் தீவிலேயே வடக்கு கிழக்கு ஒரு சொர்க்கபுரியாக மாற்றப்படக்கூடிய அளவிற்கு தமிழர்களிடம் ஆற்றலும் ஆளுமையும் இருக்கிற” - என்றார்