சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு
சுகாதார அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெள்ளிக்கிழமைக்கு முன்பு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பதா என்ற நிலைப்பாட்டை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முடிவெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாரிய நெருக்கடி
கிளிநொச்சி - மலையாளபுரம் கிராம மக்களுடனான கலந்துரையாடல் மலையாளபுரம் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் இன்று(03.09.2023) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து தெரிவிக்கையில், “இன்று சாதாரண நீரிழிவு நோயாளருக்கு கூட மருந்து இல்லாத நிலை வைத்தியசாலைகளில் இருப்பதுடன், பாரிய மருந்து நெருக்கடி நிலவுகிறது.
மருந்துகளை நோயாளர்கள் வெளியில் வாங்க வேண்டிய நிலையுள்ளது. பல வைத்தியசாலைகள் இயங்கு நிலையற்று காணப்படுகிறது.
இலங்கையின் சுகாதாரத் துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இதனை உள்வாங்கியிருக்கிறோம் .பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற ரீதியில் கலந்தாலோசித்து வெள்ளிக்கிழமைக்கிடையில் முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.