தாயகத்தில் 1000 விகாரைகளை கட்ட கூட்டமைப்பு ஆதரவு - பகிரங்க குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டுவதற்கு கண்ணை மூடிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4 ஆம் நாளினை நினைவுகூறும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூறும் நிகழ்வொன்று அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் உள்ள படுகொலை நினைவுத்தூபி முன்பாக இன்று(15) இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
“எமது மக்களுக்கு ரணிலின் கடந்த கால நரித்தனமான போக்கு நன்கு தெரியும். அவர் எமது மக்களை மெது மெதுவாக கருவறுப்பார். 6 ஆவது தடவையாக அவர் பிரதம மந்திரியாக வந்திருக்கின்றார் என நான் நினைக்கின்றேன்.
இவரது ஆட்சிக்காலத்தில் எமது மக்களை மிக மோசமான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
கடந்த நல்லாட்சியிலும் கூட, வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டுவதற்கு இவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்ணை மூடிக்கொண்டு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி இருக்கின்றது.
அதன் பின்னர் ஏனைய அரசாங்கமும் இச்செயற்பாட்டை தொடர்ந்து வந்தது. வடக்கில் கடந்த வாரம் கூட இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விகாரைக்கு அடிக்கல் நாட்டி இருந்தார்.
அதே போன்று பொன்னாலை, ஊர்காவற்றுறை போன்ற இடங்களில் தனியார் காணிகள் பறிக்கப்பட்டு இராணுவ முகாங்கள் அமைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு பஞ்சம் பட்டினியான காலங்களிலும் கூட சிங்கள தேசிய வாதத்தினரின் மனோ நிலை மாறவில்லை. அவர்கள் கட்டமைப்பு சார் இனவழிப்புகளை மேற்கொள்கின்றார்கள். ஆகவே எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்” என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
