தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் விடுதலை
மருதங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி குழப்பம்
யாழ்ப்பாணம் மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையில் இடம்பெற்ற குழப்பத்தை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
5 ஆம் திகதி அதிகாலை மருதங்கேணி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளரான உதய சிவம் வற்றாப்பளையில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
மருதங்கேணி பகுதியில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து இருவரும் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வாரத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பளை காவல் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
