டீசல் விலையை லீற்றருக்கு ரூ.170ஆக அதிகரிக்க வேண்டும்! அழுத்தம் தெரிவிக்கும் தனியார் நிறுவனங்கள்
செலவுகளை ஈடுகட்டும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதுடன், கடல் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தற்போதைய நிலைமையில் ஒரு லீற்றர் டீசலை விநியோகிக்கும் போது சுமார் 170 ரூபாய் நட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள்
இது தொடர்பில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, எரிசக்தி அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நிலைமையை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அரசாங்கத்தினால் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயும் வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த ஜூலை மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டது.
இந்தத் தீர்மானத்தையடுத்து, எதிர்கால எரிபொருள் தொகுதிகளுக்கான கொள்வனவு உத்தரவுகளை மேற்கொள்ள தேவையான நிதியை திரட்டுவதில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
செலவுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டம் காரணமாக தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது கடும் ஆபத்துக்குள்ளாகும் எனவும் அந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இதேவேளை, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள்
மேலும் சில தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் இல்லை என்ற அறிவித்தல் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

இருப்பினும், இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா, எரிபொருள் கூட்டுத்தாபன (Ceypetco) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முன்னதாக தெரிவித்திருந்தார்.
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 16 மணி நேரம் முன்