வெள்ளக்காடாக மாறியுள்ள யாழ்ப்பாணம் - ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் (Maradalingam Pradeepan) தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய இடங்கள்
அத்தோடு, பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனர்த்த ஆபத்து காரணமாக வதிவிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக தங்குமிடங்களில் தங்கியிருப்போருக்கு சமைத்த உணவு வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) கொட்டித் தீர்க்கும் மழையால் பல பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் (Nagalingam Vethanayagan) தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டமானது, இன்று (22) காலை 10 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை
இதன்போது, வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களை தணிப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
வடக்கு மாகாண பிரதம செயலர், மாவட்டச் செயலர்கள், உள்ளூராட்சி அமைச்சின் செயலர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர்
இலங்கை மின்சார சபையின் பிராந்திய முகாமையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், வடக்கு மாகாண மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர், இராணுவக் கட்டளைத்தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.
செய்திகள் - கஜந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |