வலுவிழந்து வரும் காற்றழுத்த தாழ்வு: வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பல தடவைகள் மழை
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மீனவர் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பரப்பகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.
எனினும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |