முதல் வெற்றியை பதிவுசெய்துள்ள மும்பை இந்தியன்ஸ்!
புதிய இணைப்பு
235 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி தோல்வியடைந்துள்ளது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் பிரித்வி ஷா - அபிஷேக் போரல் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
எனினும் பும்ராவின் பந்து வீச்சில் பிரித்வி ஷா 66 ஓட்டங்களில் போல்டானார். ஷா ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே அபிஷேக் போரலும் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய பண்ட் இந்த முறை 1 ஓட்டத்தில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஸ்டப்ஸ் தனி ஆளாக போராடினார்.
மும்பை அணியின் பந்துவீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்கவிட்ட அவர் 25 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்தார். இருப்பினும் இலக்கை நெருங்க முடியவில்லை.
முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இரண்டாம் இணைப்பு
நாணயசுழற்சியில் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.
இவர்களில் ரோகித் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நீண்ட நாள் காயத்திற்கு பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட் ஆனார்.
சிறிது நேரத்திலேயே இஷான் கிஷன் 42 ஓட்டங்களிலும், திலக் வர்மா 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பாண்ட்யா 39 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதிலும் குறிப்பாக ஷெப்பார்டு கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் உட்பட 32 ஓட்டங்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ஓட்டங்கள் குவித்துள்ளது.
டெல்லி தரப்பில் அக்சர் படேல் மற்றும் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி துடுப்பெடுத்தாட உள்ளது.
முதல் இணைப்பு
மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயசுழற்சியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிப்பெற்று பந்து வீச தீர்மானித்துள்ளது.
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (7) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
நாணயசுழற்சியில் வெற்றி
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஒரு வெற்றியை கூட இதுவரையில் பெறவில்லை.
தனது முதல் ஆட்டத்தில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வியடைந்த மும்பை அணி, ஐதராபாத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது.
சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும் தோற்றது.
மும்பை இந்தியன்ஸ்
இந்நிலையில் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை அந்த இடத்துக்கு அதிரடியாக கொண்டு வந்ததால் அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள்.
எனினும், அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு சூர்யகுமார் யாதவ் அன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளது அணிக்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோற்றது.
அடுத்த ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.
எனவே, இன்றைய போட்டியில் யார் வெற்றிப்பெறுவார்கள் என மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், போட்டியில் மும்பை அணி வென்று தனது வெற்றிக்கணக்கை ஆரம்பிக்குமா என பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |