பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் அரச சார்பற்ற அமைப்புக்கள் : சரத் வீரசேகர குற்றச்சாட்டு..!
இலங்கையில் பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரச சார்பற்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவிகளுக்கு அடிமையாகியுள்ள தரப்பினர் குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் தற்போது பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.பௌத்த கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல்
வேறு நாடுகளில் இவ்வாறாக நடைபெற்றால், அதே நேரத்தில் குறித்த தவறுக்கான தண்டனையை அந்த நாட்டு மக்களே பெற்றுக் கொடுப்பார்கள். பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், பௌத்த மதத்தையும் தலதா மாளிகையையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சேபால அமரசிங்க கைது செய்யப்பட்டார். எனினும், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் டொலர்களுக்காக சொந்த நாட்டையும் பௌத்தையும் ஒருவரால் அவமதிக்க முடியுமானால், அவரது மனைவி, தாய் மற்றும் சகோதரி ஆகியோரையும் குறித்த நபருக்கு பணத்துக்காக காட்டிக் கொடுக்க முடியும்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் தரப்பினர் தண்டிக்கப்பட வேண்டுத். இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் மூலம் எம்மால் தவிர்க்க முடியும். இதற்காக குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிகழ்நிலை காப்பு சட்டம்
இலங்கையில் நடைபெறும் விடயங்கள் குறித்து மக்களை தெரியப்படுத்த பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவை இருந்தாலும், சமூக ஊடகங்கள் இதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
இதன்படி, 32 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் போலி தகவல்கள் குறித்து ஆராய சட்டமூலமொன்று அவசியம்.
இதற்கேற்க, உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் போலியாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து அவதானத்துடன் செயல்பட முடியும்.
இந்த சட்டமூலத்தை வேறு விதமாக வெளிக்காட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில்? கூகுள், யூடியுப், முகநூல் உள்ளிட்ட சமூக வலையத்தள நிறுவனங்களுடன் சிறிலங்கா பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.
சரத் வீரசேகர
குறித்த நிறுவனங்களால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தால், அவை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பரிந்துரைக்கேற்ப சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், விமர்சனங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டது.
விமர்சனங்கள் நல்லது. எனினும், சிறந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளலாம். எனினும், ஒருவரை அவமதிக்கும் வகையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. விமர்சனம் எனும் பெயரில் யாரும் யாரையும் அவமதிக்க முடியாது.” என தெரிவித்தார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |