தமிழர்களின் அறம் மரத்துப் போகிறதா...!
நேற்று இந்தோனேசியா அகதி முகாமிலே இறந்த ஈழத்து சகோதரி ஒருவரின் மரணச் செய்தியும், இந்த விடயத்திலே தமிழ் மக்களின் அணுகுமுறையும் மிகுந்த வேதனை அளிக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு தாய் நிலத்திலிருந்து வெளியேறி இந்தோனேசியாவிலே அகதி முகாமில் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் அகதிப் பெண் அசோக்குமார் லலிதா அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சகோதரியின் இறப்பு
இந்த சகோதரியின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், கணவன் அசோக்குமார் மற்றும் இரு பிள்ளைகளுடன் இந்தோனேசியாவில் மெடான் நகரில், பெலவான் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் திருமதி லலிதா அவர்கள் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டடிருந்த சூழலில் போதிய மருத்துவ வசதி வழங்கப்படாமையால் அவர் உயிர் இழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இறந்த இந்த சகோதரியின் 11 வயது மகன் தாயின் கடமைகளைச் செய்யும் போது, "நான் 07 வயதிலே எனது தந்தையார் இறந்தபோது அவருக்கு இறுதிக்கடமைகளை செய்த அனுபவத்தை என் கண்முன்னே வேதனையுடன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது." எனக் கூறினார்.
மனிதநேயம்
இதில் கொடுமை என்னவென்றால் இந்தோனேசியாவிலே நீண்ட காலமாக இந்துப் பாரம்பரியத்தோடு, இந்துக் கோயில்கள் வைத்து, இந்திய கலாச்சார பின்னணி கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களிடம் இறந்து போன இந்த அகதி சகோதரியின் உடலை, அவர்களின் தகனம் செய்யும் இடத்திலே அடக்கம் செய்வதற்கு அங்குள்ள நமது ஈழ உறவுகள் அணுகிய போது தங்களிடத்தில் ஒருபோதும் தகனம் செய்ய முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டார்களாம்.
இந்த நேரத்தில் தான் அங்கே பல தசாப்தங்களாக, அங்கே சகல உரிமைகளோடும் வசித்து வரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் மனித நேயத்தோடு இறந்த சகோதரியின் உடலை தங்களிடத்தில் தகனம் செய்வதற்கு அனுமதி கொடுத்து தங்கள் தோழமை உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழினம்
தமிழர்கள் தங்களுக்கிடையில் சாதி, மதம், பிரதேசவாதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பல்வேறு கூறுகளாக வன்ம உணர்வோடு பிரிந்து கிடப்பதால், தமிழ் மக்களுக்குள் இருக்கும் அறம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்று இந்தோனேசியாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
உலகப்பந்தில் ஒரு தேசத்தை உருவாக்குவதற்குரிய தகுதி என்பது, ஒரு இனம் உலகில் எங்கு பரந்து வாழ்ந்தாலும் தர்ம சிந்தனையோடு, மற்றவர்களையும் தூக்கி விட வேண்டும் என்ற அடிப்படைப் பண்போடு வாழ வேண்டும்.
அப்போது தான் இந்த பூமிப் பந்தில் ஏனைய சமூகங்கள் போல் தமிழர்களும் சகல உரிமைகளோடு எழுந்து நிற்க முடியும்.
இறந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்பதோடு, சகோதரியின் இறப்பைத் தாங்க முடியாமல் தவிக்கும் சகோதரியின் கணவருக்கும், அவரின் பிள்ளைகளுக்கும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் உறவுகள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த குழந்தைகளின் எதிர்காலத்தோடு இறைவனும், இயற்கையும் நல்ல மனிதர்களும் கூட இருக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
