யாழில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
புதுவருடத்தில் யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதிகளில் உள்ள சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கத்தரிக்காய் ஒரு கிலோ 450 ரூபாவிற்கும், தக்காளி பழம் ஒரு கிலோ 600 ரூபாவிற்கும், பீற்றூட் ஒரு கிலோ 300 ரூபாவிற்கும் அதிக விலைகளில் வடமராட்சி சந்தைகளில் விற்கப்பட்டமை அவதானிக்க முடிந்தது.
மக்கள் இன்றி வெறிச்சோடி
நேற்றைய தினம் புத்தாண்டு சந்தை பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை நகர்ப் பகுதியில் கடந்த வருடங்கள் போல் அல்லாது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இதற்கு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாமென பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கற்பனைக்கு எட்டாத வகையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, மக்களின் வாழ்க்கை அழிந்து, அசௌகரியமும், மன அழுத்தமும் அதிகரித்து அன்றாட வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்ற பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்தாலும் மக்களைப் பலிகொடுத்து ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி அரசாங்கத்திற்கு மக்கள் படும் இன்னல்கள் புரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
